Skip to main content

7வது முறையாக சாம்பியன் ஆன ஆஸ்திரேலியா! 

Published on 03/04/2022 | Edited on 03/04/2022

 

Australia become champions for the 7th time!

 

நியூசிலாந்து கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தும், முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலியாவும் மோதின. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 356 ரன்கள் குவித்தது. தொடக்க வீராங்கனை அலீசா ஹீலி சதமடித்து, 170 ரன்கள் குவித்தார். ஹெய்ன்ஸ் 68 ரன்னிலும், பெத் மூனி 62 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

 

இதையடுத்து, 357 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. ஆனால், அந்த அணியில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தது. அதேசமயம், அந்த அணியின் நடாலி சீவர் சதமடித்தார். அவர் 121 பந்துகளில் ஒரு சிக்சர், 15 பவுண்டரி உள்பட 148 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.


இறுதியில், இங்கிலாந்து 43.4 ஓவரில் 285 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன், உலக கோப்பையில் 7வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இதுவரை 6 முறை உலக கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா இந்த முறையும் அதன் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 7வது முறையாக சாம்பியன் ஆனது.