Skip to main content

தலைவர்னா... இந்த நாலும் இருக்கணும்! - தலைவா #1

Published on 13/06/2018 | Edited on 13/06/2018

தலைவராகும் ஆசை, யாருக்குத்தான் இல்லை? வெறும் ஆசை மட்டும் போதாது. தலைமைத்துவம் என்றால் என்னவென்று தெரிந்திருக்க வேண்டும். தலைவராக இருப்பதற்கான முக்கிய தேவைகளை அறிந்திருக்க வேண்டும். கற்றல் இல்லை என்றால், வளர்ச்சியைக் காண முடியாது!

 

leader

 

தலைமைப் பண்புகள் யாரோ சிலருக்கு மட்டும் சொந்தமானவை அல்ல. எவர் வேண்டுமானாலும் இந்த தலைமைப் பண்புகளை வளர்த்துக்கொள்ள முடியும், அதைப் பயன்படுத்தி தலைவராகவும் முடியும். ஒரு குறிக்கோளை நிர்ணயித்து அந்தக் குறிக்கோளை அடைய ஒரு குழுவினரை, அல்லது திரளான மக்களை வழிநடத்த தலைமைப்பண்புகள் பயன்படுகின்றன. எனவே ஒருவர் எந்த ஒரு நேரத்திலும் தலைவராக முடியும்! அதற்கான பண்புகளைக் கற்றுக் கொள்ளவும்  முடியும்! அப்படி பார்க்கையில் தலைமை பண்புகளை வளர்த்துக்கொள்ள பின்வரும் அடிப்படை விஷயங்கள் தேவை!! 
 

1. உறுதியான குறிக்கோள் அல்லது லட்சியக் கருத்து தலைவருக்கு  வேண்டும்

2. தலைவராக இருக்கும் ஒருவருக்கு அவரைப் பின்பற்றக்கூடிய ஒருவராவது இருக்க வேண்டும்

3. தலைமைத்துவப் பண்புகளை அவர் பயன்படுத்த வேண்டும்.

மேலும் பின்பற்றக் கூடியவர்கள் அல்லது தொண்டர்கள் இல்லாமல் தலைவர் இல்லை. எனவே குழு என்றால் என்ன? குழுவாக செயல்படுவது எப்படி? என்றெல்லாம் தெரிந்து கொள்வதும் அவசியமாகும்.

ஒரு குறிக்கோளுக்காகச் சேர்ந்து செயல்படும் தனிநபர்கள் பலரைக் கொண்டதுதான் குழு என்பது. ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் சேர்ந்தால் அது குழுதான். ஒரு தலைவரும் ஒரு உறுப்பினரும் இருந்தாலும்கூட குழுதான். எனினும் எல்லா குழுக்களிலும் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இருப்பதை நாம் காணமுடியும். இந்தக் குழுவின் ஒவ்வொரு உறுப்பினரும் தலைவரின் "வழி நடப்பவர்'’ அல்லது தொண்டர் என அழைக்கப்படுவர்.


 

leader

 


தேர்ந்தெடுக்கப்படும் தலைவர்

ஒரு லட்சியத்தை நிறைவேற்ற ஒருவரால் உருவாக்கப்பட்ட குழு அவரை எவ்வித எதிர்ப்புமின்றித் தலைவராக ஏற்றுக் கொள்ளலாம், அல்லது அதிகாரப்பூர்வமாக விரும்பித் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இதில் உறுப்பினர்கள் தங்கள் தலைவரின் செல்வாக்கிற்கு உட்படுகின்றனர். அவரை ஏற்றுக் கொள்கின்றனர். இதனால் அவரைத் தங்களுக்குத் தலைமை தாங்க தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனர். எடுத்துக்காட்டாக, ஓர் ஊரில் உள்ள இளைஞர் மன்றம் தனது உறுப்பினர் கூட்டத்தைக் கூட்டி, மன்றத் தலைவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறது. பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு பெற்றவர் அல்லது ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறவர் அங்கே தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

நியமனத் தலைவர்

இதற்கு அடுத்து நியமன தலைவர்கள். பெரும் நிறுவனங்களில் தலைமைப்பதவிக்கு தலைமை நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள். அங்கே பணிபுரிபவர்களால் அவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை.  இத்தகைய நியமனத் தலைவர்களை அவருக்குக் கீழ் இருப்பவர்கள் முழுமனதோடு ஏற்றுக் கொண்டிருப்பார்கள் என்று சொல்ல முடியாது. ஒரு நிர்வாகம் தனக்கு வேண்டிய ஒருவரை தலைவராகத் திணித்துள்ளது. பல அரசியல் கட்சிகள்கூட தங்கள் கட்சியின் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக நியமனம் செய்வதையும் அதனை ஏற்றுக்கொள்ளாமல் தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதையும் நீங்கள் நேரில் கண்டிருக்கலாம். எடுத்துக்காட்டாக ஓர் அனைத்திந்திய கட்சி தனது மாநிலத் தலைமை நிர்வாகிகளை நியமனம் செய்யும்போது, அது அம்மாநிலத்தில் உள்ள கட்சித் தொண்டர்களின் விருப்பத்திற்கு மாறாக அமைந்துவிடுவது உண்டு. தலைவரைத் தேர்ந்தெடுக்கும்போது அவரை நம்பிக்கைக்கு உரியவராக, தகுதியானவராக, மரியாதைக்குரியவராக உறுப்பினர்கள் கருதுகின்றனர்.

 

leader



தலைவராக ஒருவர் நியமிக்கப்படும்போது அத்தகைய மதிப்பு, மரியாதை விருப்பத் தேர்வு என்பது இல்லாமல் போவதால், அத்தகைய நியமனத் தலைவருக்கு ஆதரவு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுவிடுகிறது. நியமிக்கப்பட்ட ஒருவர், உறுப்பினர்களின், தொண்டர்களின் விருப்பத்துக்குரிய ஒருவராக இருந்துவிட்டால் பிரச்சினைக்கு வழி இல்லை. ஒரு குழுவை உருவாக்கி, அல்லது உருவான குழுவில் குழு உறுப்பினர்களுக்காகப் பாடுபட்டு அவர்களின் நன்மதிப்பைப் பெற்ற ஒருவர் அவர்கள் மத்தியில் தலைவராக உருவாகலாம். ஆனால்  உயர்மட்டத் தலைமை, வேறு ஒருவரை தலைவராக நியமித்துவிடும்போது, ஒரே குழுவுக்கு இருவேறு தலைமை ஏற்பட்டுவிடும். அதாவது குழு உறுப்பினர்களின் ஆதரவு இல்லாத தலைமை (நியமனத்தலைவர்), ஆதரவு பெற்ற தலைமை (குழு உறுப்பினர்களின் செல்வாக்கு மிக்க ஒருவர் உருவாகிவிடும். நியமனத் தலைவர் போதுமான தகுதி இல்லாதவராக இருக்கலாம். அவரது அணுகுமுறை உறுப்பினர்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம் எனவே உறுப்பினர்கள் அந்தத் தலைமையை நிராகரித்து தங்களுக்குள் ஒரு தலைமையைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதுண்டு. ஒரு குழுவுக்கு இரண்டு தலைமை கூடாது. யாரைப் பின்பற்றுவது என்ற குழப்பம் ஏற்படும். நிறுவனத்தில் உற்பத்தியும் பாதிக்கப்படலாம். அரசியல் கட்சி, மன்றங்களில் குழுமோதல்கள் ஏற்பட்டு, அவற்றின் செயல்பாடுகள் தேக்கமடையக்கூடும். தேர்ந்தெடுக்கப்பட்டாலும் நியமிக்கப்பட்டாலும் அவர்கள் தலைவர்கள்தான்.
 

1 விழிப்புணர்வு

2 உறுதிபடச் சொல்லல்

3 பதில்கூறும் கடமை

4 ஆதரவாக இருத்தல்

 

இவை நான்கும் செயலூக்கமுள்ள தலைவருக்குத் தேவையான பண்புகள் ஆகும். இவற்றைத் தனித்தனியே ஆராயலாம் என்றாலும் இவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்பதை மறக்கக்கூடாது. உறுதிபட ஒன்றைச் சொல்லவும் செய்யவும் வேண்டுமானால் தலைவருக்கும் தொண்டருக்கும் விழிப்புணர்வு தேவை. உறுதியாகச் செயல்படுவதும் ஒருவரது செயல்களுக்குப் பொறுப்பேற்பதும் ஆதரவளிப்பதைச் சார்ந்துள்ளது. விழிப்புணர்வு என்பதில் அடங்கியுள்ள பல்வேறு கூறுகளைப் பார்க்கவேண்டும். எந்தெந்த கூறுகளைப் பற்றியெல்லாம் நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும் என்பது தலைவருக்கு முக்கியம் இப்படி தலைவன் என்பவன் எந்த நேரத்திலும் தற்சார்பற்ற எண்ணமிகுந்த ஒருவன்தான் தொண்டனின் ஆதவரவை பெறவே முடியும்.