Skip to main content

மூன்று தலைமுறைக்கு செல்வம் நிலைக்க முத்தான பரிகாரங்கள்! 

Published on 13/10/2023 | Edited on 13/10/2023

 

 Remedies to keep wealth for three generations!

 

செல்வம் மட்டும்தான் நம்மை வறுமை என்னும் தீமையினின்று காப்பாற்றும். பணத்தைவிட உயர்ந்தவை பலவுள்ளன என்றாலும், அவற்றைப் பெற பணமே தேவை. "பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை' என்பதே உலகப் பொதுமறை. ஆற்றில் நீர் இருக்கும் சமயத்தில் படகில் சென்றால் நினைத்த இடம் போய்ச் சேரலாம். அதுபோல வாழ்விலும் செல்வத்தைப் பயன்படுத்தி மட்டுமே நினைத்ததைப் பெறலாம். அந்த செல்வத்தைத் தீர்மானிப்பது நம் வருமானம்.

 

‘வருமானம்’ என்ற சொல் மனிதருக்கு பொருள் (செல்வம்) எவ்வளவு முக்கியமானது என்பதை விளக்கும் பொருள்பொதிந்த சொல். வருமானம் இருந்தால் மானம் (தன்மானம்) வரும்; இல்லையென்றால் மானம் போகும்.

 

வரவேற்றால் வருபவள் ஸ்ரீதேவி; அழைக்காமல் வருபவள் மூதேவி என்பதே உண்மை. திருமகள் வந்தால் அழகு; தவ்வை (மூதேவி) போனால் அழகு. மகாலட்சுமியை மனமுருக வேண்டியும், சிலருக்கு செல்வியின் அருட் கடாட்சம் கிடைக்காமல் போகிறது. இதற்குக் காரணம், மூதேவி உள்ளவரை ஸ்ரீதேவி அந்த இடத்திற்கு வரமாட்டாள் என்பதே ரகசியம். மனதின் அழுக்காகிய பொறாமையும், இருப்பிடத்தின் அசுத்தமாகிய ஒட்டடை, தூசி, எருக்கன் செடி போன்றவையும் இருக்குமிடத்தில் செந்தாமரைச் செல்வி வாசம் செய்யமாட்டாள்.

 

● ஒருவர் ஜாதகத்தில் ராஜ கிரகங்களான சூரியன் மற்றும் சந்திரனின் நிலை பலமாக இருந்து, லக்னமும் வலிமை பெற்றால் அவருக்கு தனயோகம் அமைந்துவிடும்.

 

●ஒரு ஜாதகத்தில் லக்னத்திலிருந்து 2, 6, 10 ஆகிய வீடுகள் அர்த்த திரிகோணம் எனப்படுகின்றன. அர்த்த திரிகோணாதிபதிகளின் பலமான தொடர்புகள் தொழில்மூலம் வரும் நிரந்தர வருவாயைக் குறிக்கிறது.

 

●குரு ஆட்சி, உச்சம் பெற்று, அசுபர்களின் தொடர்பு அல்லது பார்வை பெறாமல் வலுத்திருந்தால் ஜாதகரை வறுமை அணுகாது.

 

●இரண்டாம் அதிபதியும், பதினோறாம் அதிபதியும் இணைந்து லக்னம் அல்லது லக்னாதிபதியின் தொடர்பிலிருந்தால், செல்வம் தரும் யோக அமைப்பு உருவாகும்.

 

● பணபர ஸ்தானங்களான லக்னத்திற்கு 2, 5, 8, 11 ஆகிய வீடுகள் வலுவடைந்தாலும் செல்வத்திற்குக் குறைவிருக்காது. ஜாதகத்தில் பணபர ஸ்தானங்கள் வலுவடைந்து நவாம்சமும் வலுப் பெற்றால் மட்டுமே தனலட்சுமி தாண்டவமாடுவாள் என்று சொல்லிவிட முடியாது. இந்து லக்னம் (மகாலட்சுமி ஸ்தானம்) வலுப்பெற்றால் மட்டுமே செல்வத்தின் சேர்க்கையால் கோடீஸ்வர யோகத்தைத் தரும்.

 

இந்து லக்னம் என்பது சூரியனின் அடிப்படையிலான லக்னத்தையும், சந்திரனின் அடிப்படையிலான ராசி யையும் இணைத்து ‘கிரக களா பரிமாணம' என்ற முறையில் கணிக்கப்படுகிறது. சூரியன்-30, சந்திரன்-16, சுக்கிரன்- 12, குரு-10, புதன்-8, செவ்வாய்-6, சனி-1. ஜாதகத்தில் லக்னத்திற்கு ஒன்பதாம் வீட்டு அதிபதியின் எண்ணையும், ராசிக்கு ஒன்பதாம் வீட்டு அதிபதியின் எண்ணையும் கூட்டினால் வரும் எண்ணை, பன்னிரண்டால் வகுத்தால் வரும் மிகுதியை ராசியிலிருந்து எண்ணினால் அது எந்த வீட்டில் முடிகிறதோ அதுவே அவருடைய இந்து லக்னமாகும். இந்து லக்னாதிபதி இந்து லக்னத்தில் ஆட்சி அல்லது உச்சம் பெறுவதே சிறப்பு.

 

திருமகளை நம் இல்லத்திற்கு வரவேற்று நிலைபெறச் செய்வதற்கும், இல்லாமை இல்லாமல் போகவும், வளமை நம்மை வலம் வரவும் செய்ய வேண்டிய பரிகாரங்கள்: ஒட்டடை, அசுத்தங்களை அகற்றி, நம் இருப்பிடத்தை ஒளிமயமாக வைத்துக் கொள்வதால், வாழ்க்கை ஒளிமயமாகும். தினமும் வீட்டின் முன்வாசலைக் கழுவிக் கோலமிடுவதே திருமகளை வரவேற்பதாகும்.

 

ஸ்ரீதேவி முன்வாசல் வழியாக வருவாள்; மூதேவி பின்வாசல் வழியாக வருவாள் என்பதால், மாலை நேரத்தில் பின்வாசலை அடைத்துவிடுதல் நல்லது. கிழிந்த ஆடைகளை அணிவதைத் தவிர்ப்பதே வறுமையை விலக்கும் வழி. உடைந்த கண்ணாடி, பின்னமான விக்கிரகங்களை அப்புறப்படுத்துவதால் தீமை விலகும். வெள்ளிக்கிழமைகளில், தாமரைத் திரியிட்ட ஐந்துமுக விளக்கில் மகாலட்சுமியை தியானம் செய்து வழிபடுவது, சகல ஐஸ்வரியங்களையும் தரும்.

 

காஞ்சி காமாட்சியம்மன் சந்நிதியில் தரப்படுகிற குங்குமப் பிரசாதத்தை, காயத்ரி மண்டபத்திலுள்ள அரூப லட்சுமியின் மேல் வைத்துவிட்டு, அவளையும் வணங்கி பிரசாதத்தை எடுத்துச் செல்வதால், குறையாத செல்வம் பெறலாம். சிவபெருமான் திருஞானசம்பந்தருக்குப் பொற்கிழி அளித்த, திருவாவடுதுறை சென்று கோமுக்தீஸ்வரரை வணங்கினால் செல்வம் சேரும்.

 

வெள்ளிக்கிழமைகளில், பசுவுக்கு அகத்திக்கீரையை உணவாகத் தந்து வணங்கினால், மூன்று தலைமுறைகளுக்கு வறுமை நெருங்காது. பணப்பெட்டியில் மகாவில்வம் வைத்து வழிபட்டால் செல்வத்தின் ஓட்டம் வற்றாது. புறாக்களுக்கு நவதானியத்தை உணவாகத் தந்தால் வறுமை பறந்து போகும்.

 

- வைபவ சாஸ்திர ஜோதிடர் குடந்தை சிவராமன்