Skip to main content

சர்ச்சை பதிவை நீக்கிய ட்விட்டர்... பதிலடியாக புதிய உத்தரவை பிறப்பித்த ட்ரம்ப்...

Published on 30/05/2020 | Edited on 30/05/2020

 

twitter and trump tweet

 

மினசோட்டா போராட்டம் குறித்த அதிபர் ட்ரம்ப்பின் சர்ச்சை பதிவை ட்விட்டர் நிறுவனம் நீக்கிய நிலையில் சமூக வலைதளங்களின் பாதுகாப்பை கட்டுப்படுத்தும் புதிய நிர்வாக உத்தரவில் ட்ரம்ப் நேற்று கையெழுத்திட்டார். 


அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் கருப்பினத்தவர் ஒருவரை போலீஸார் கொன்றதால் ஏற்பட்ட போராட்டங்கள் மற்றும் கலவரங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது. மினசோட்டா தலைநகரான மினியாபொலிஸ் நகரில் கள்ளநோட்டு தொடர்பான விசாரணை ஒன்றின்போது, கருப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் பிலாய்ட் எனும் நபர் போலீஸாரின் பிடியில் உயிரிழந்தார். 

விசாரணைக்காக ஜார்ஜ் காரை விட்டு இறங்காததால், அவரை வெளியே இழுத்த போலீஸார், அவரை கீழே தள்ளி கைகளின் விலங்கை மாட்டியுள்ளனர். அப்போது ஒரு காவலர், ஜார்ஜின் கழுத்தில் தனது முழங்காலை வைத்து கடுமையாக அழுத்தியுள்ளார். இதனால் சுவாசிக்க முடியாமல் தவித்த ஜார்ஜ், "என்னால் மூச்சுவிட முடியவில்லை, என்னைக் கொன்றுவிடாதீர்கள்" என போலீஸாரிடம் கெஞ்சியுள்ளார். ஆனால் இதனை காதில் வாங்காத அந்த காவலர், தொடர்ந்து சுமார் எட்டு நிமிடங்கள் அவரது கழுத்தைக் காலால் அழுத்திக்கொண்டே இருந்துள்ளார். இதனால் ஜார்ஜ் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார். இந்த காணொளி இணையத்தில் வெளியாக அந்நாட்டின் பல இடங்களில் போராட்டங்களை ஏற்படுத்தியுள்ளது.

 

 


இந்த சூழலில், இக்கலவரங்கள் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப், போராட்டக்காரர்களை 'குண்டர்கள்' என விமர்சித்ததோடு, போராட்டத்தை காரணம் காட்டி பொதுமக்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவதாக தகவல் வெளியானால், துப்பாக்கிச் சூடு தொடங்கப்படுவதோடு, தேசியப் பாதுகாப்புப் படையும் அனுப்பப்படும் என ட்விட்டரில் தெரிவித்தார்.

அவரின் இந்த கருத்து மக்களை மிரட்டும் விதமாகவும், வன்முறையை ஆதரிக்கும் விதமாக உள்ளதாகவும், அவரது கருத்தை நீக்கிவிட்டது ட்விட்டர் நிறுவனம். ட்விட்டரின் இந்த செயலை கடுமையாக விமர்சித்த ட்ரம்ப், இதற்குப் பதிலடி தரும் விதமாக சமூக வலைத்தளங்களின் பாதுகாப்பைகட்டுப்படுத்தும் நிர்வாக உத்தரவில் நேற்று கையெழுத்திட்டார். அதிபர் ட்ரம்ப்பின் இந்த நடவடிக்கைக்கும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், இதற்கு எதிராகவும் பலர் கருத்து தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்