Skip to main content

"அமெரிக்காவிற்கு அவமானம்" - கமலா ஹாரிஸ் குறித்து ட்ரம்ப்பின் சர்ச்சை பேச்சு...

Published on 09/09/2020 | Edited on 09/09/2020

 

trump

 

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. ஜனநாயக் கட்சி சார்பில் ஜோ பைடன் போட்டியிடுகிறார். அந்தக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர்களை எதிர்த்து குடியரசுக் கட்சி போட்டியிடுகிறது. இக்கட்சியின் வேட்பாளராக தற்போதைய அதிபர் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். கரோனா அச்சுறுத்தலுக்கு இடையிலும் தேர்தல் பிரச்சாரங்கள் அமெரிக்காவில் சூடு பிடிக்க ஆரம்பித்து, தற்போது வார்த்தை மோதலாக முற்றியுள்ளது.

 

கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ட்ரம்ப் அரசு தோல்வியடைந்துவிட்டது என்ற குற்றச்சாட்டு தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக முன்வைக்கப்பட்டு வருகிறது. வரும் தேர்தலுக்குள் கரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்துவிடும் என்று அமெரிக்க செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதை ட்ரம்ப் தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்பு வெளியிட இருக்கிறார் என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் இது குறித்துப் பேசிய கமலா ஹாரிஸ் ட்ரம்ப் கூறுவதை எல்லாம் நம்ப முடியாது. கரோனா விவகாரத்தில் சுகாதார நிபுணர்களை குழப்பியதே அவர் தான். சுகாதார நிபுணர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பேச்சை முதலிலேயே கேட்டிருந்தால் இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்காது என்று கடுமையாகச் சாடினார். இதற்குப் பதிலளித்த ட்ரம்ப், ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் தடுப்பூசி குறித்து அவதூறாகப் பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியிருந்தார். மேலும், இது போன்ற பிரச்சாரங்கள் மூலம் இது மிகப்பெரிய சாதனையில்லையென மக்களை நம்ப வைக்க முடியும் என கமலா ஹாரிஸ் நினைக்கிறார் என்று அவர் மீது காட்டமான விமர்சனத்தை முன்வைத்தார்.

 

தற்போது நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ட்ரம்ப், கமலா ஹாரிஸ் ஒரு போதும் முதல் பெண் அதிபராக ஆகமுடியாது. அமெரிக்க மக்கள் அவரை விரும்பவில்லை. அவர் வெற்றி பெற்றால் அது அமெரிக்காவிற்கே அவமானம் எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்