Skip to main content

விறுவிறுப்பாக நடைபெற்ற வங்காள தேச பொதுத் தேர்தல்; மீண்டும் பிரதமராகும் ஷேக் ஹசீனா!

Published on 08/01/2024 | Edited on 08/01/2024
Sheikh Hasina is again the Prime Minister of Bangladesh!

வங்காள தேசத்தில், பங்களாதேஷ் அவாமி லீக் கட்சி சார்பில் ஷேக் ஹசீனா 15 வருடங்களாகப் பிரதமராகப் பொறுப்பு வகித்து வந்தார். இந்த நாட்டில் விரைவான பொருளாதார வளர்ச்சியும், இந்தியாவை விட அதிகமான உள்நாட்டு உற்பத்தி விகிதத்தை எட்டியபோதும், அங்கு கடுமையான பணவீக்கம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள், அதிகரித்து வரும் செலவுகளை குறிப்பாக உணவுப் பொருட்களின் விலையேற்றத்தைச் சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றனர்.  

மேலும், பிரதமர் ஷேக் ஹசீனா மீது ஊழல் மற்றும் மனித உரிமை மீறல் போன்ற குற்றச்சாட்டுகள் அவ்வப்போது எழுந்து வருகின்றன. அதனால், வங்கதேச தேசியக் கழகம் மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமி ஆகிய இரு பிரதான எதிர்க்கட்சிகள், பிரதமர் உடனடியாக பதவி விலகவும், ஆளும் ஆட்சி கலைக்கப்பட்டுத் தேர்தல் முடியும் வரை கட்சி சார்பற்ற அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தன. 

இதையடுத்து, முக்கிய எதிர்க்கட்சியான வங்கதேச தேசியக் கழகம் நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. மேலும், இந்தத் தேர்தலை புறக்கணிப்பதாகவும் அக்கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான கலீதா ஜியா அறிவித்தார். இதனால் சட்டம், ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாகக் கருதி கலீதா வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தி வந்தனர். 

இந்த நிலையில், அந்நாட்டில் பாராளுமன்றத் தேர்தல் நேற்று (07-01-24) விறுவிறுப்பாக நடைபெற்றது. எதிர்க்கட்சிகள் தேர்தலைப் புறக்கணித்த நிலையில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றது. 350 தொகுதிகள் கொண்ட வங்காள தேசத்தில் 50 தொகுதிகளுக்கு அரசாங்கத்தால் பெண் எம்.பி.க்கள் நியமிக்கப்படுவர். எனவே, 300 தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெறும். ஆனால், ஒரு வேட்பாளர் இறந்ததால் மீதமுள்ள 299 தொகுதிகளுக்கு மட்டும் நேற்று தேர்தல் நடைபெற்றது. 

தேர்தல் முடிந்ததும், உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருந்தபோது ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி 50 சதவீத இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றதாகத் தேர்தல் ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். 299 இடங்களில் 264 இடங்களுக்கான முடிவு அறிவிக்கப்பட்டபோது, ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி 204 இடங்களில் வெற்றி பெற்றிருந்ததாகக் கூறப்பட்டது. மேலும், அதன் கூட்டணிக் கட்சியான ஜதியா கட்சி 9 இடங்களில் வெற்றி பெற்றிருந்ததாகக் கூறப்பட்டது. இதன் மூலம், ஷேக் ஹசீனா ஐந்தாவது முறையாக வங்காள தேச நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்க இருக்கிறார். கோபால்கஞ்ச் தொகுதியில் போட்டியிட்ட ஷேக் ஹசீனா, 8வது முறையாக வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்