Skip to main content

தலிபான்களை சர்வதேச பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் ரஷ்யா!

Published on 08/10/2021 | Edited on 08/10/2021

 

taliban

 

ஆப்கானிஸ்தான் நாட்டைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள், அங்கு தங்கள் இடைக்கால ஆட்சியை நடத்திவருகின்றனர். இருப்பினும் இதுவரை தலிபான்களின் அரசை எந்த நாடும் அங்கீகரிக்கவில்லை. அதேநேரத்தில் பாகிஸ்தான் விரைவில் தலிபான்களின் ஆட்சியை அங்கீகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள், தலிபான்களை அங்கீகரிக்கும் விவகாரத்தில் பொறுமையைக் கடைப்பிடிக்க முடிவு செய்துள்ளன.

 

அதேநேரத்தில் ஆப்கானிஸ்தானில் தாங்கள் செய்துள்ள முதலீடுகள் காரணமாக அந்த நாட்டில் தலிபான்கள் ஆட்சி அமைத்துள்ளது குறித்து பல்வேறு உலக நாடுகள் கவலையடைந்துள்ளன. மேலும் இந்தியா உள்ளிட்ட நாடுகள், தலிபான்களால் தங்கள் பிராந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுமோ என கவலையடைந்துள்ளன. இந்தச் சூழலில் ரஷ்யா, தலிபான்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைக்க முடிவு செய்துள்ளது.

 

அக்டோபர் 20ஆம் தேதி நடைபெறும் ஒரு சர்வதேச பேச்சுவார்த்தைக்கு தலிபான்களை அழைக்கவுள்ளதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் ஆப்கானிஸ்தானுக்கான சிறப்பு பிரதிநிதி ஜமீர் கபுலோவ் தெரிவித்துள்ளார். அதேபோல் சீனா, இந்தியா, ஈரான், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அடங்கிய கூட்டு பேச்சுவார்த்தைக்கு தலிபான்களுக்கு அழைப்பு விடுக்கப்படுமா என ஒரு பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு, அழைப்பு விடுக்கப்படும் என அவர் பதிலளித்தார்.

 

தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதும், அதன் அண்டை நாடான தஜிகிஸ்தானில் ரஷ்யா இராணுவ பயிற்சியை நடத்தியது. மேலும், அங்குள்ள தனது இராணுவ தளத்தில் ஆயுதங்களை அதிகரித்தது. மேலும் ரஷ்ய அதிபர் புதின், கடந்த வியாழனன்று ஆப்கானிஸ்தானின் தற்போதைய சூழல் குறித்தும் அதனால் பாதுகாப்பு நிலைமையில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் குறித்தும் தஜிகிஸ்தான் பிரதமர் எமோமாலி ரக்மானோடு விவாதித்தார். அதன்தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைக்காக தலிபான்களுக்கு அழைப்பு விடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்