Skip to main content

“செய்தியின் உண்மைத்தன்மையை ஆராயாமல் திரித்து கூறுவது உகந்ததல்ல” - தமிழக அரசு விளக்கம்!

Published on 16/05/2024 | Edited on 16/05/2024
TN govt says It is not appropriate to distort the news without examining its veracity 

டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 30 வது கூட்டம் மே 21 ஆம் தேதி (21.05.2024) நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்திற்கு காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமை தாங்குகிறார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்க தமிழகம், கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் காவிரி குழு கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்ல அதிகாரிகளுக்கு தடை என்று வெளியான செய்திக்கு தமிழக அரசு மறுப்பு செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் அனைத்து கூட்டங்களிலும் தமிழ்நாடு அரசு சார்பாக நீர்வளத்துறை அதிகாரிகள் நேரிலோ அல்லது காணொளி காட்சி மூலமாகவோ தொடர்ந்து பங்கேற்று தமிழ்நாட்டின் வாதங்களை வலுவாக முன்வைத்து வருகின்றனர். டெல்லியில் நடைபெறும் காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டங்களிலும் தொடர்ந்து பங்கேற்று தமிழ்நாட்டிற்கு உரிய நீர் பங்கினை பெறுவதற்கு தேவையான கருத்துகள், தக்க புள்ளி விவரங்களுடன் வலுவாக எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் 94வது கூட்டம் புதுச்சேரியில் 21.03.2024 அன்று நடைபெற்றது. அதில் தமிழ்நாட்டின் அதிகாரிகள் நேரில் கலந்து கொண்டனர். 

TN govt says It is not appropriate to distort the news without examining its veracity 

இந்நிலையில் உண்மைக்கு புறம்பாக ‘காவிரி குழு கூட்டத்தில் பங்கேற்க டில்லி செல்ல அதிகாரிகளுக்கு தடை’ என்ற செய்தி 16.05.2024) பிரபல நாளிதழில் ஒன்றில் வெளியாகியுள்ளது. இதுபோன்று தமிழ்நாடு அரசு எத்தகைய உத்தரவும் பிறப்பிக்கவில்லை என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. பன்மாநில நதிநீர் பிரச்சனை தொடர்புடைய கூட்டங்களில் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் நேரில் கலந்து கொண்டு தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்ட தகுந்த வாதங்களை எடுத்துரைத்து வருகின்றனர். மேலும், அக்கூட்டங்களில் நேரில் கலந்துகொள்ள தமிழ்நாடு அரசு தேவையான அனுமதியை உடனுக்குடன் அளித்து வருகிறது. இவ்வாறு இருக்கையில் செய்தியின் உண்மைத்தன்மையை ஆராயாமல் திரித்து கூறுவது ஒரு பிரபலமான நாளிதழுக்கு உகந்ததல்ல” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்