Skip to main content

அங்கன்வாடி மையத்தில் உணவு சாப்பிட்ட குழந்தைகளுக்கு நேர்ந்த விபரீதம்! நேரில் சென்ற அமைச்சர்! 

Published on 01/06/2022 | Edited on 01/06/2022

 

Tragedy befalls children eating at Anganwadi Center! Minister who went in person!

 

புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தின் பின்புறம் தெற்கு சந்தைப்பேட்டையில் அங்கன்வாடி மையம் செயல்பட்டுவருகிறது. இந்த அங்கன்வாடி மையத்தில் அதே பகுதியை சேர்ந்த குழந்தைகள் 50-க்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று சுமார் 30 குழந்தைகள் அங்கன்வாடி மையத்திற்கு வந்தனர். அவர்கள் மதியம் 12.30 மணி அளவில் மதிய உணவை சாப்பிட்டுள்ளனர். பின் குழந்தைகள் மதியம் 2 மணிக்கு வீட்டுக்கு சென்றுள்ளனர். 

 

அங்கன்வாடி மையத்தில் இருந்து வீட்டிற்கு சென்ற குழந்தைகள் சிலருக்கு வாந்தியும், சிலருக்கு வயிற்றுப்போக்கும் ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தைகளின் பெற்றோர் பதறிப் போனார்கள். உடனே குழந்தைகளை  சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் நாகராஜன் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.  

 

தற்போது மருத்துவமனையில் மொத்தம் 28 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி பிரவீன்குமார் மற்றும் அதிகாரிகள் அங்கன்வாடி மையத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் மதியம் தயாரிக்கப்பட்ட உணவு மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ஆய்வுக்கு பின் தான் குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டதற்கான காரணம் தெரியவரும் எனத் தெரிவித்தனர்.

 

இந்த விவகாரம் அறிந்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஆட்சியர் கவிதாராமு ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளை நேரில் சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினர்.

 

அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ரகுபதி, “அங்கன்வாடி மையத்தில் 22 குழந்தைகள் மதிய உணவு சாப்பிட்டுள்ளனர். அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. அங்கன்வாடி மையத்தில் இருந்து உணவினை வாங்கிச்சென்று வீட்டில் வைத்து சிலர் சாப்பிட்டுள்ளனர். இதில் 2 பேருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது'' என்றார். 

 


 

 

சார்ந்த செய்திகள்