Skip to main content

சேலம் அருகே விமர்சையாக நடந்த ஜல்லிக்கட்டு! 

Published on 22/01/2019 | Edited on 22/01/2019
jj


பொங்கல் பண்டிகையையொட்டி சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கூலமேடு, தம்மம்பட்டி, நாகியம்பட்டி ஆகிய இடங்களில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு போட்டி மிகவும் பிரசித்தி பெற்றது. 


ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம், காவல்துறை, விழாக்குழுவினர் விரிவாக செய்திருந்தனர். ஏற்கனவே கடந்த 18ம் தேதி கூலமேடு கிராத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்ட நிலையில், திங்கள்கிழமையன்று (ஜனவரி 21) நாகியம்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடந்தது.


தோப்புமண்டி மைதானத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட ஆட்சியர் ரோகிணி துவக்கி வைத்தார். கள்ளக்குறிச்சி எம்பி, மருதமுத்து எம்எல்ஏ, மாவட்ட எஸ்பி தீபா கணிகர், ஆர்டிஓ செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.    அதிகாரிகள் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். 500க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. 400க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு மாடுகளை அடக்கினர்.


முன்னதாக சேலம், நாமக்கல், கரூர், அரியலூர், துறையூர் பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட காளைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. 


முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காயம் அடையும் வீரர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பதற்கு வசதியாக ஆம்புலன்ஸ் வாகனமும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருந்தது. காயம் அடையும் காளைகளுக்கு சிகிச்சை அளிக்க கால்நடை மருத்துவர்களும் வரவழைக்கப்பட்டு இருந்தனர். 


ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள், காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. ஆத்தூர், தம்மம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் நாகியம்பட்டி ஜல்லிக்கட்டு போட்டியை ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.
 

சார்ந்த செய்திகள்