Skip to main content

பெரியார் பல்கலை ஊழியர்கள் 4 பேர் சஸ்பெண்ட்! காத்திருப்பு போராட்டம் மீண்டும் தீவிரம்!

Published on 30/10/2019 | Edited on 30/10/2019

பெரியார் பல்கலையில் தொகுப்பூதிய பணியாளர்கள் நால்வர் திடீரென்று தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து, ஊழியர்கள் மீண்டும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 

periyar university issue


சேலம் பெரியார் பல்கலையில் நிர்வாக பணிகளை மேற்கொள்ள தொகுப்பூதிய மற்றும் தினக்கூலி ஒப்பந்தப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். தொகுப்பூதியத்தின் கீழ் 239 பேரும், தினக்கூலி அடிப்படையில் 170 பேரும் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை வரன்முறைப்படுத்த வேண்டும் என்றும், தினக்கூலி பணியாளர்களை தொகுப்பூதியத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்றும் கோரி, கடந்த செப். 23ம் தேதி கருப்பு பட்டை அணிந்து கொண்டு அலுவலகப் பணிகளில் ஈடுபட்டனர்.

அதையடுத்து, அக். 8ம் தேதி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, ஒருநாள் உண்ணாவிரத போராட்டமும் நடத்தினர். தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்து தொடர் போராட்டங்களை முன்னெடுப்பது குறித்து பெரியார் பல்கலை தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சக்திவேல் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். இது, பல்கலை விதிகளுக்கு எதிரானது எனக்கூறி, செவ்வாய்க்கிழமை (அக். 29) அவரை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார், துணைவேந்தர் குழந்தைவேல்.

சக்திவேல் மட்டுமின்றி அவருடைய சங்கத்தைச் சேர்ந்த துணைத்தலைவர் கிருஷ்ணவேணி, பெரியார் பல்கலை நிர்வாக பணியாளர்கள் சங்கத்தலைவர் கனிவண்ணன், துணைத்தலைவர் செந்தில்குமார் ஆகியோரையும் தற்காலிக பணிநீக்கம் செய்திருக்கிறது பல்கலை நிர்வாகம். அவர்கள் பல்கலைக்குள் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. வருகைப்பதிவு செய்யக்கூடிய பயோமெட்ரிக் உபகரணத்தில் இருந்தும் மேற்சொன்ன நால்வரின் பெயர்களையும் அதிரடியாக அகற்றி இருக்கிறது.

ஒரு குறிப்பிட்ட நிர்வாகத்தின் கீழ் பணியாற்றும்போது, அதற்கு எதிராக கருத்து சொல்வது என்பது விதிகளுக்குப் புறம்பானதுதான் என்றாலும், ஒரு தொழிற்சங்கவாதியாக நிர்வாக சீர்கேடுகளையோ, தங்களுக்கான அடிப்படை உரிமைகளுக்காகவோ குரல் கொடுக்க தொழிற்சங்க விதிகளில் இடம் இருக்கிறது. ஆனாலும், பெரியார் பல்கலை நிர்வாகம் எதேச்சாதிகாரப் போக்குடன் நான்கு பேரை தற்காலிக பணிநீக்கம் செய்திருப்பது, முரணாக இருக்கிறது. 

இதையடுத்து பல்கலை நிர்வாகத்தைக் கண்டித்து, அனைத்து தொகுப்பூதிய, தினக்கூலி பணியாளர்களும் இன்று காலை முதல் பல்கலை வளாகத்தில் பெரியார் சிலைக்கு அருகே தரையில் அமர்ந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இது தொடர்பாக பெரியார் பல்கலை தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சக்திவேல் நம்மிடம் பேசினார், ''தினக்கூலி அடிப்படையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வந்த ஊழியர்களில் கணிசமானோர் தொகுப்பூதியத்திற்கு மாற்றப்பட்டனர். அதன்படி அவர்களுக்கு வாரம் ஒரு நாள் சம்பளத்துடன் கூடிய விடுப்புடன் மாதந்தோறும் ஊதியம் வழங்கப்பட்டது. ஆனால், துணைவேந்தராக குழந்தைவேல் பொறுப்பேற்ற பிறகு, எங்களுக்கு நாள் அடிப்படையில் ஊதியம் கணக்கிடப்பட்டு வழங்கப்படும் புதிய முறையை திடீரென்று அமல்படுத்தினார். அதாவது, நான்கு ஞாயிற்றுக்கிழமைகள், அரசு விடுமுறை நாள்களில் எங்களுக்கு ஊதியம் கிடையாது. இந்த புதிய நடைமுறையை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழையபடி மாத அடிப்படையில் ஊதியம் வழங்க வேண்டும். 
 

periyar university issue


மேலும், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இன்னும் 170 பேர் தினக்கூலிகளாக பணியாற்றி வருகின்றனர். அவர்களை உடனடியாக தொகுப்பூதியத்திற்கு மாற்ற வேண்டும். தணிக்கை அறிக்கையில் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மீதான தடைகளுக்கு தீர்வு காணும் வகையில் விரைவாக கூட்டமர்வுக்கு ஏற்பாடு செய்ய  வேண்டும். பதிவாளர், தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் ஆகிய காலிப் பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும். 

முன்னாள் பதிவாளர் அங்கமுத்து தற்கொலைக்கு முன்னர் எழுதிய கடிதத்தில், பல்கலை பேராசிரியர்கள், ஊழியர்கள் சிலர் மீது குற்றம்சாட்டியிருந்தார். அவர்கள் மீது துறை ரீதியான விசாரணை நடத்த வேண்டும். மேலும், அங்கமுத்து பணிக்காலத்தில் சில முக்கிய கோப்புகள் மாயமானது குறித்தும் விசாரிக்க வேண்டும். இக்கோரிக்கைகள் உள்பட மேலும் சிலவற்றை வலியுறுத்திதான் போராடி வருகிறோம்.

இது தொடர்பான போராட்ட அறிவிப்பு குறித்து நான் பேட்டி அளித்தேன். அப்போது என் அருகே நின்றிருந்த பணியாளர்களையும் பழிவாங்கும் நோக்கில் இப்போது தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளது வேடிக்கையாக இருக்கிறது. எங்கள் மீதான பணியிடை நீக்க நடவடிக்கையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்,'' என்றார் சக்திவேல்.

தொகுப்பூதியத்தில் 12 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் சில ஊழியர்கள் பெறும் அதிகபட்ச ஊதியமே 14700 ரூபாய்தான். இன்னும் குறைந்தபட்சம் 5000 ரூபாய் ஊதியம் பெறுவோரும் இருக்கிறார்கள். தொகுப்பூதியத்தில் ஓர் ஊழியர் ஓராண்டு பெறும் மொத்த ஊதியத்தைக் கணக்கிட்டால், 20 ஆண்டுகள் அனுபவம் உள்ள ஒரு பேராசிரியரின் ஊதியத்தைக்கூட தாண்டாது என்பது கள யதார்த்தம். இதே பல்கலையில் பேராசிரியர்கள் பலருக்கு விதிகளை மீறி பல கோடி ரூபாய்க்கு மேல் ஊதியம் வழங்கப்பட்டு உள்ளதாக தணிக்கை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ள நிலையில், கடைநிலையில் அதுவும் சொற்ப ஊதியத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்தப் பணியாளர்களை ஒடுக்க நினைப்பது சரியானதாகத் தெரியவில்லை.
 

periyar university issue


போலி பணி அனுபவ சான்றிதழ், உரிய கல்வித்தகுதி இல்லாதவர்கள், படித்தது ஒரு துறை; பணியாற்றுவது வேறு துறை, போலி 'பில்' மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் இப்போதைய பதிவாளர், தமிழ்த்துறைத் தலைவர், பல்கலை டீன் உள்ளிட்ட பலரும் ஆட்பட்டுள்ள நிலையில், தொகுப்பூதிய பணியாளர்களை ஒடுக்குவதில் மட்டும் நிர்வாகம் அதீத ஆர்வம் காட்டுவது விந்தையாக இருக்கிறது. 

இப்பிரச்னையில் சுமூகமான முறையில் தீர்வு காண பல்கலை துணைவேந்தர் இறங்கி வர வேண்டும்.... ஆதிக்க மனநிலையில் இருந்தும்; மாடியில் உள்ள அலுவலகத்தில் இருந்தும்.
 

சார்ந்த செய்திகள்