Skip to main content

மாணவர்கள் ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாவதை மத்திய, மாநில அரசுகள்தான் தடுக்க முடியும் - உயர் நீதிமன்றம்

Published on 01/07/2021 | Edited on 01/07/2021

 

Only the federal and state governments can prevent students from becoming addicted to online games - High Court

 

ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்கள் ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு அடிமையாகாமல் மத்திய, மாநில அரசுகள்தான் தடுக்க முடியும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

ஆன்லைன் வகுப்புகளுக்குப் பயன்படுத்தப்படும் செல்ஃபோன், கணினி, மடிக்கணினி ஆகியவற்றில் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விளையாட்டுக்களைத் தடை செய்யவும், இதுதொடர்பாக ஆய்வுசெய்து கண்காணிப்பதற்கான நடைமுறையைக் கொண்டுவரக் கோரியும் மார்ட்டின் ஜெயக்குமார் என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார்.

 

இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆன்லைன் விளையாட்டுக்களால் குழந்தைகளும், இளம் பருவத்தினரும், மாணவர்களும் விளையாட்டுகளில் உள்ள கதாபாத்திரங்களாக மாறிவிடுவதுடன், வன்முறை எண்ணங்களுக்கும் ஆளாவதாக வாதிட்டார். இதுபோன்ற விளையாட்டுகளில் பங்கேற்பவர்களைத் தவறாகப் பயன்படுத்துவதற்கு பப்ஜி மதன் போன்றவர்கள் மட்டுமே காரணம் இல்லை என்றும், நாடு முழுவதும் இந்த விளையாட்டில் பங்கேற்பவர்களும் காரணமாக அமைந்துவிடுவதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார். அவர்களைப் பாதுகாப்பதற்கான தகுந்த நடவடிக்கையை எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

 

அப்போது நீதிபதிகள், கரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் பலரும் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கின்றனர். அதேசமயம் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைப் விளையாட்டுகளுக்கும் அவர்கள் அடிமையாகிவிடுவதாக வேதனை தெரிவித்தனர்.

 

படிப்பு மற்றும் விளையாட்டு போன்ற காரணங்களுக்காக, அதிக அளவில் மொபைல் மற்றும் கணினி பயன்படுத்தும் மாணவர்கள், அதிகப்படியான கோப மனநிலைக்கும், தற்கொலை முயற்சிக்கும் ஆளாவதாக குறிப்பிட்ட நீதிபதிகள், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகாமல் அரசுகள்தான் தடுக்க முடியும் என தெரிவித்தனர்.

 

பெற்றோர் மற்றும் பெரியோரிடம் கூட குழந்தைகள் பேசுவது குறைந்துவருவதாக கவலை தெரிவித்ததுடன், தங்கள் குழந்தைகளுடன் பெற்றோர் நேரத்தை செலவழிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.

 

பின்னர் வழக்கு குறித்து மத்திய, மாநில அரசுகள் 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையைத் தள்ளிவைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்