Skip to main content

கலைஞருக்காக இணைய வானொலி: வியக்க வைக்கும் தகவல் களஞ்சியம்

Published on 21/01/2022 | Edited on 21/01/2022

 

 

வானொலி நேயர்களுக்காக 24 மணிநேரமும் ஒலிக்கிற எப்.எம். போன்று பெரியார், அண்ணா, கலைஞர், ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களின் உரைகள், அவர்கள் தொடர்பான அரசியல், இலக்கியம் என அனைத்து சாதனைகளையும் கொண்ட கலைஞர் எப்.எம். தற்போது 24 மணிநேரமும் தமிழர்களின் குரலாய் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. தென்காசி மாவட்டத்தின் சிவகிரி பகுதியைச் சேர்ந்த எம்.ஏ.எம்.ஃபில் பட்டதாரி டெக்னீசியனான மகேந்திரன் தனிமனிதனாகக் கலைஞர் எப்.எம்.ஐ உருவாக்கி, அதை அரிய தகவல் களஞ்சியமாக்கி அசத்தியிருக்கிறார்.

 

அடிப்படையில் தி.மு.க. வழி வந்த அடிமட்டக் குடும்பத்தைச் சார்ந்த மகேந்திரன், பெரியார், அண்ணா, கலைஞர் மீது ஈர்ப்பு கொண்டவர். எப்.எம். தொழிலில் டெக்னீசியனாகப் பணியாற்றிய மகேந்திரன் பின்னர் பல பிரபலங்களுக்கென்று தனியாக எப்.எம்.களை உருவாக்கிக் கொடுத்தவர். தன்னுடைய நீண்ட நாள் கனவான திராவிடத் தலைவர்களான கலைஞர் உள்ளிட்ட தமிழறிஞர்களுக்கென்று அனைத்துத் தொகுப்புகளையும் கொண்ட தனியொரு எப்.எம். உருவாக்கும் பணியை மேற்கொண்டார். ஒரு சில வருடங்களாக அவர்கள் பற்றிய அரும்பெரும் தகவல்களைத் திரட்டி எப்.எம். உருவாக்கியதை விரிவாகச் சொன்னவர், தற்போது அது அரும்பெரும் தகவல் களஞ்சியமாகியிருக்கிறது என்கிறார்.

 

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் 50 ஆண்டுகளுக்கும் மேல் நிலைத்து நின்றவர். அரை நூற்றாண்டின் தலைப்புச் செய்தியானவர். தொடர்ந்து 12முறை எம்.எல்.ஏ.வாகி, ஐந்து முறை முதலமைச்சராகி சாதனை படைத்தவர். 150க்கும் மேற்பட்ட நூல்களை எழுதிய இலக்கியச் சிற்பி. உடன் பிறப்பே என முரசொலியில் 7000 கடிதங்களுக்கும் மேலாக எழுதியவர். அதுமட்டுமின்றி இந்தியப் பிரதமர், மற்றும் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதில் ஆலோசனை வழங்கும் முக்கிய கட்டங்களிலும் கலைஞரின் பங்கு இருந்திருக்கிறது.

 

கலைஞர் எப்.எம்.டாட் காமில் 24 மணி நேரமும் ஒலிபரப்பாகும் ஒலிப்பேழையில் கலைஞரின் வாழ்க்கை வரலாற்றுத் தொகுப்புகளும் அடங்கியுள்ளன. கலைஞர் பற்றிய பாடல்கள் குறிப்பாக அவர் பற்றி நாட்டுப்புற கிராமியப் பாடல்கள் ஒயிலாட்டமாய் ஒலிக்கின்றன.

 

தன் வாழ்நாளில் 21 நாடகங்களிலும் 69 திரைப்படங்களிலும் பணியாற்றிய படைப்பாளியான கலைஞரின் திரைக்கதை மற்றும் பட வசனங்களான ராஜகுமாரி, உலகப் புகழ் பெற்ற பராசக்தி முதற்கொண்டு பொன்னர் சங்கர் படம் வரையிலான வசனங்கள் இடம் பெற்ற படங்களின் தொகுப்பாகவும் ஒலிக்கின்றன. இது மட்டுமல்ல, தி.மு.க.வின் பிச்சாரப் பாடல்கள், கலைஞர் ஆற்றிய புகழ்பெற்றத் தொகுப்புகள், அண்ணா, பெரியார் ஆற்றிய புகழ் வாய்ந்த உரைகளின் தொகுப்புகளுடன் ஸ்டாலின் நிகழ்த்திய மதிப்பு வாய்ந்த உரைகளின் தொகுப்புகள் என்று ஒவ்வொன்றும் தவறாமல் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்