Skip to main content

கொள்ளுப் பேரக்குழந்தைகளுடன் 105-வது பிறந்தநாளைக் கொண்டாடிய மூதாட்டி!

Published on 06/12/2020 | Edited on 06/12/2020
 Grandmother celebrating her 105th birthday with her grandchildren!

 

மகன்கள், பேரன், பேத்திகள், கொள்ளுப் பேரன், பேத்திகளுடன் தனது 105 வது பிறந்த நாளை கொண்டாடி, சுமார் 500 பேருக்கு ஆசிர்வதித்துள்ளார் பொன்னம்மாள் பாட்டி.

 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள எல்.என்.புரம் ஊராட்சி அணவயல், ஜீவா நகர் துரைச்சாமி சேர்வை என்பவரின் மனைவி பொன்னம்மாள். அணவயலில் பிறந்து மலேசியாவுக்கு சென்று 13 வயதில் மீண்டும் சொந்த ஊருக்கு வந்து துரைச்சாமி சேர்வையை திருமணம் செய்து கொண்ட பொன்னம்மாளுக்கு முத்து, சண்முகம், பழனிவேல் என மூன்று மகன்கள். இவர்களுக்கு 9 பேரன் பேத்திகள். 13 கொள்ளுப் பேரன், பேத்திகள் உள்ளனர். கணவர் இறந்துவிட்ட பிறகு மகன்களுடன் வசிக்கும் பொன்னம்மாள் பாட்டிக்கு இப்போது 105 வயதாகிறது. இத்தனை வயதிலும் தனது பணிகளை தானே செய்துகொள்ளும் அளவிற்கு முழு உடல் நலத்தோடு இருக்கிறார்.

 

பாட்டியின் 105-ஆவது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட நினைத்த பேரன், பேத்திகள் சுமார் ஆயிரம் அழைப்பிதழ்கள் அச்சடித்து ஊர், உறவுகளுக்கு கொடுத்து டிசம்பர் 6-ந் தேதி பிறந்த நாள் கொண்டாடினார்கள். வந்தவர்கள் அனைவருக்கும் கல்யாணம், காதுகுத்து போல 150 கிலோ ஆட்டுக்கறியுடன் அசைவ விருந்து படைத்தனர். சுமார் 500 பேருக்கு மேல் வந்து பொன்னம்மாள் பாட்டியிடம் ஆசி பெற்றனர்.

 

 Grandmother celebrating her 105th birthday with her grandchildren!

 

காலை முதல் மாலை வரை ஓய்வின்றி அனைவருக்கும் விபூதி பூசி ஆசிர்வதித்து அனுப்பினார். பொன்னம்ம்ள் பாட்டியின் பேரன்கள் சங்கர் மற்றும் பாஸ்கர் கூறும் போது, அணவயலில் பிறந்து மலேசியா சென்று பிறகு, மீண்டும் அணவயலுக்கு வந்து திருமணம் செய்து கொண்ட பாட்டிக்கு, விவசாய வேலைகளில் உடல் உழைப்பு அதிகம். அதற்கு ஏற்ப பாரம்பரிய உணவுகளையும் சாப்பிட்டதால் தான் இத்தனை வயதிலும் திடமாக உள்ளார். மரபணு மாற்றப்பட்ட, நஞ்சில்லாத இயற்கை உணவுகளை சாப்பிட்டால் 100 வயதை கடந்தும் வாழமுடியும் என்பதற்கு எங்கள் பாட்டியே சாட்சி. இப்பொழுது உள்ள உணவுகளை சாப்பிடும் பேதுதான் நோய்கள் எல்லாம் வருகிறது. இனிமேல் ஒவ்வொரு வருடமும் பாட்டிக்கு பிறந்த நாள் கொண்டாடுவோம் என்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்