Skip to main content

பதவி ஒரு கேடா எங்களுக்கு? துணை ஜனாதிபதியிடம் ராஜினாமா கடிதத்தை கொடுக்கிறேன்: எம்.பி முத்துக்கருப்பன்

Published on 31/03/2018 | Edited on 31/03/2018
muthu


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ராஜினாமா செய்ய முடிவு செய்ய உள்ளதாக அதிமுக எம்.பி முத்துக்கருப்பன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,

விவசாயிகளின் கஷ்டத்தை என்னால் தாங்க முடியவில்லை. உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை. மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடியிடமும், பாஜக தலைவர் அமித்ஷாவிடமும் தனிப்பட்ட முறையில் பேசி இருக்கிறேன். ஆனால் அவர்கள் வாயே திறக்கவில்லை. மக்கள் குடிப்பதற்குக்கூட தண்ணீர் இல்லாமல் தவிக்கிறார்கள். இந்த நிலையில் பதவி ஒரு கேடா எங்களுக்கு?

அதனால் எனது எம்.பி. பதவியை நான் ராஜினாமா செய்ய முடிவு செய்து உள்ளேன். இந்த அறிவிப்பு வாய்மொழியாக மட்டும் இருக்காது. கண்டிப்பாக ராஜினாமா செய்வேன். இதில் எந்த சமாதானமும் இல்லை.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததை கண்டித்து எம்.பி.க்களாகிய நாங்கள் பாராளுமன்றத்தை நடத்தவிடாமல் செய்தோம். இதைவிட எப்படி அழுத்தம் தர முடியும்? ராஜினாமா செய்வது பற்றி முதலமைச்சரிடமும், துணை முதலமைச்சரிடமும் நான் ஆலோசனை கேட்கவில்லை. இது தன்னிச்சையாக நான் எடுத்த முடிவு.

மத்திய அரசு தமிழகத்துக்கு தர வேண்டிய நிதியை திட்டமிட்டே தரவில்லை. கர்நாடக தேர்தலை கருத்தில்கொண்டே காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. அரசியலுக்காக தமிழகத்தை மத்திய அரசு ஏன்தான் இப்படி நடத்துகிறது என்று தெரியவில்லை. இப்படி ஒரு மத்திய அரசு நமக்கு தேவையா? மக்கள் பிரச்சினையில் பாஜக அரசியல் செய்யக்கூடாது.

நவநீதகிருஷ்ணன் எம்.பி. தற்கொலை செய்வதாக கூறினார். தற்கொலை செய்வதால் என்ன நடந்து விடும்?. உயிரோடு இருந்தால்தான் போராட முடியும். நான் ராஜினாமா செய்கிறேன். இதைவிட வேறு என்ன செய்ய முடியும்?

பதவி விலகும் முடிவை மாற்றிக் கொள்ளுமாறு முதல்-அமைச்சரும், துணை முதலமைச்சரும் என்னிடம் கூறினால் அவர்களிடம், மற்ற எம்.பி.க்களையும் ராஜினாமா செய்ய சொல்லுமாறு வலியுறுத்துவேன். எனது முடிவில் இருந்து மாற மாட்டேன். நான் திருநெல்வேலிக் காரன். சொன்னால் சொன்னதுதான். மாற்றிச் சொல்லமாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

சார்ந்த செய்திகள்