Skip to main content

காவல் நிலையத்தில் ரகளை செய்த ரௌடி குண்டர் சட்டத்தில் கைது!

Published on 17/05/2024 | Edited on 17/05/2024
rowdy thug who ran afoul of the police station was arrested under the law

திருச்சி, திருவானைக்கா 5 ஆம் பிரகாரத்தைச் சேர்ந்தவர் காஜாமைதீன்(63). சமையல் தொழிலாளியான இவர், ஏப்ரல் 21 ஆம் தேதி (சனிக்கிழமை) இரவு திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள ஒரு மதுக்கூடத்துக்கு வந்துள்ளார். அவரை நோட்டமிட்ட மதுபோதையிலிருந்த மர்ம நபர்கள் 4 பேர் காஜாமைதீனிடம் இருந்தப் பையை (அதில் ரூ.1,400 ரொக்கத்துடன்) பறித்து சென்றனர். இதில் ஒருவரைப் பிடித்த காஜாமைதீன், சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் ஒப்படைக்க இழுத்துச்சென்றார்.

அப்போது அவரை அந்த மர்ம நபர், புறக்காவல் நிலையம் அருகே வைத்து அரிவாளால் வெட்டியுள்ளார். இதைக்கண்ட புறக்காவல் நிலைய போலீசார் அந்த இளைஞரை மடக்கிப் பிடிக்க முயன்றபோது அவர் கையில் வைத்திருந்த அரிவாளை சுழற்றி ரகளையில் ஈடுபட்டார்.
பின்னர் அவரை பொதுமக்கள் உதவியுடன் போலீசார் மடக்கி பிடித்தனர். இதில், ரகளையில் ஈடுபட்ட நபரை பொதுமக்கள் சரமாரியாக தாக்கியதில் இளைஞர் காயமடைந்தார். அதேபோல இளைஞரைப் பிடிக்க முயன்ற உதவி ஆய்வாளர்கள் ராஜா, பிரேம் ஆனந்த் மற்றும் அரிவாளால் வெட்டுப்பட்ட முதியவரும் காயமடைந்தனர். இதில் இளைஞர் மற்றும் வெட்டுப்பட்ட முதியவர் இருவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். உதவி ஆய்வாளர்கள் முதலுதவி சிகிச்சைப் பெற்றனர்.

இது தொடர்பாக கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு, ரகளையில் ஈடுபட்ட திருச்சி கோட்டை சிந்தாமணி அந்தோணியார் கோயில் தெருவைச் சேர்ந்த எம்.அபிஷேக் (23) என்பவரையும், வழிப்பறி செய்து தப்பிய கோட்டை காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கே.குரு(20), காந்திமார்க்கெட் பகுதியைச் சேர்ந்த அ.தவ்பிக்(19), அரியமங்கலத்தைச் சேர்ந்த எம்.அபுபக்கர் சித்திக்(19) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். இதில் அபிஷேக் மீது கோட்டைகாவல் நிலையத்தில் மேலும் பல வழக்குகள் பதிவாகியுள்ள நிலையிலும் அவர் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளார். எனவே அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யவேண்டும் எனக் கோட்டை போலீசார் பரிந்துரைத்தனர். பரிந்துரையை ஏற்ற மாநகர காவல் ஆணையர் ந.காமினி, அபிஷேக்கை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வியாழக்கிழமை உத்தரவிட்டார். இதனையடுத்து அவர் மத்திய சிறையில் தண்டனை கைதிகள் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

சார்ந்த செய்திகள்