Skip to main content

“அதிமுக கொடி, பெயர், சின்னங்களை பயன்படுத்த ஓ.பி.எஸ்ஸுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும்” - உயர்நீதி மன்றம் உத்தரவு

Published on 11/01/2024 | Edited on 11/01/2024
The ban on OPS from using AIADMK flag name and symbols will continue High Court orders

அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாகி ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகிய இருவரும் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் முறையிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச்செயலாளராகத் தேர்தல் ஆணையம் கடந்த 20.04.2023 அன்று அங்கீகரித்தது. இதன் மூலம் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் என்பது உறுதியானது. அதே சமயம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்து அதிமுகவின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களைப் பயன்படுத்தி வருகிறார். இதனால் அதிமுக தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது. எனவே அதிமுகவின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த தடைவிதிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி சதீஷ்குமார், 'எத்தனை முறைதான் ஒரே ஒரு விவகாரத்திற்காக நீதிமன்றத்தின் கதவை தட்டுகிறீர்கள்' என ஓபிஎஸ் தரப்புக்கு கண்டனம் தெரிவித்ததோடு, அதிமுகவின் கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை ஓபிஎஸ் பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி அளித்த இந்த இடைக்காலத் தடையை எதிர்த்து பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் ஆர். மகாதேவன், முகமது ஷஃபிக் அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. அப்போது ஓ.பன்னீர் செல்வம் தரப்பில், “பொதுக்குழு தொடர்பான பிரதான சிவில் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இடைக்கால உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஜனவரி 19 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. எனவே எந்த தடையும் விதிக்கக் கூடாது” என வாதிடப்பட்டது.

இந்நிலையில், ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக கொடி, பெயர், சின்னம், லெட்டர் பேட் உள்ளிட்டவற்றை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதித்தது செல்லும் எனவும், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து உயர்நீதி மன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட நீதிபதியை அணுகி நிவாரணம் பெற ஓ.பன்னீர்செல்வத்திற்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். 

சார்ந்த செய்திகள்