Skip to main content

முதல்வர் முறைப்படி அறிவிப்பார்..! - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி!

Published on 05/11/2020 | Edited on 05/11/2020

 

dddd

 

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அயலூர் ஊராட்சியில், வேளாண்மைக் கூட்டுறவு வங்கியைத் துவக்கிவைத்த தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் 35 பயனாளிகளுக்கு சிறுவணிகக் கடன்களை வழங்கினார்.

 

அதனைத் தொடர்ந்து, நம்பியூர் பகுதிகளில் சுமார் 340 -க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு சிறுவணிகக் கடன், கன்று வளர்ப்பு கடன், ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் பட்டா வழங்குதல் உள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

 

அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், "மருத்துவப் படிப்பிற்கான 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் 303 அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு ஏழை, எளிய அரசுப் பள்ளி மாணவர்களின் கனவு நிறைவேற்றப்பட்டுள்ளது. 

 

தமிழக அரசு ஆந்திராவையோ, கேரளாவையோ கவனிக்க வேண்டியது இல்லை. மாணவர்களையும், பெற்றோர்களையும் கவனிக்கிற அரசு என்ற முறையில் பள்ளிகள் திறப்பு குறித்து, வருகிற நவம்பர் 9 -ஆம் தேதி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடம் கருத்துக் கேட்கும் கூட்டம் நடத்த அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்த அறிக்கை முதல்வரிடம் சமர்ப்பித்து பின்னர் முடிவு செய்யப்படும். 

 

மாணவர்களின் நலன் கருதியே பல்வேறு நடவடிகைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல்வேறு கருத்துகள் வந்ததன் அடிப்படையில் தான், முழுமையான கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படுகிறது. அதைத் தொடர்ந்து பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் முறைப்படி அறிவிப்பார்.

 

'கருத்துக் கேட்பு, கண்துடைப்பு' என தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கு, எதற்கெடுத்தாலும் கண்துடைப்பு என்றால் என்ன செய்வது? பெற்றோர்களின் ஆலோசனையைக் கேட்ட பிறகுதான் முடிவெடுக்கப்படும். பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோர்கள் தங்கள் கருத்துகளை எழுத்து மூலமாகவும் கொடுக்கலாம். 

 

cnc

 

நீட் தேர்வுப் பயிற்சி 14ஆம் தேதி முதல் துவங்கியுள்ளது. இதில், 15,492 பேர் பயிற்சிபெற உள்ளனர். இன்னும் சேரவிருக்கும் மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்தாண்டு பொதுத்தேர்வு ரத்தாகுமா என்ற கேள்விக்கு, அது யோசிக்கவேண்டிய ஒன்று. துறை என்ன சொல்கிறது என்று தெரிந்துதான் எதையும் தெரிவிக்கமுடியும். அரசுப் பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வுகளை எதிர்கொள்வது குறித்து முதல்வர் ஆய்வு செய்வார் என்றார். 

 

 

 

சார்ந்த செய்திகள்