Skip to main content

அண்ணாமலையை விளாசிய நத்தம் விஸ்வநாதன்

Published on 05/10/2023 | Edited on 05/10/2023

 

Natham Viswanathan speech about annamalai

 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சுக்களால், அதிமுக - அண்ணாமலை இடையே கருத்து மோதல் ஏற்பட்டு, அதிமுக - பாஜக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 25 ஆம் தேதி (25.09.2023) மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிகாரப்பூர்வமாக முடிவெடுக்கப்பட்டது

 

இந்த நிலையில், அதிமுகவின் துணை பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் விஸ்வநாதன், பா.ஜ.க. குறித்தும் அண்ணாமலை குறித்தும் கடுமையாக விமர்சித்துள்ளார். அதிமுக சார்பில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நத்தம் விஸ்வநாதன், “ தோழமை கட்சியாக இருந்த பா.ஜ.க கட்சி நமது வெற்றிக்கு ஒரு தடையாகவே இருந்தது. காலில் ஒரு கட்டையை கட்டிக்கொண்டு ஓட்டப்பந்தயந்தில் ஓடுவது போல், பா.ஜ.க.வோடு கூட்டணியை வைத்துக்கொண்டு நாம் வெற்றி பெறுவது என்பது சற்று கடினமாகவே இருந்தது. 

 

இந்த உண்மையை நமது தலைவர்கள் புரிந்து கொண்டதன் காரணமாக நமக்கு வெற்றிக்கு தடையாக இருக்கின்ற பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளார்கள். மக்கள் சரியாக இருக்கிறார்கள். அதே போல் அதிமுக தொண்டர்களும் சரியாக இருக்கிறார்கள். ஆனாலும், நாம் வெற்றி இலக்கை அடைவதற்கு பா.ஜ.க கட்சி ஒன்று தடையாக இருந்தது. அந்த தடையும் இன்று நீங்கி விட்டது. இனிமேல், அதிமுகவின் வெற்றியை தடுப்பதற்கு எந்த கொம்பனாலும் முடியாது.

 

இரண்டு ஆண்டு கூட அரசியல் அனுபவம் இல்லாத ஒருவரை வைத்துக்கொண்டு அரசியல் நடத்துகிறார்கள். அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி அரசியல்வாதி தான். கத்துக்குட்டி அரசியல்வாதி இன்று எல்லாம் தெரிந்ததை போல் பேசுகிறார். தமிழ்நாட்டுக்காக 40, 50 வருடம் உழைத்ததை போல், அனைவரை பற்றியும் விமர்சனம் செய்கிறார். அதுமட்டுமல்லாமல், கூட்டணியில் இருந்து கொண்டே ஜெயலலிதாவை பற்றி விமர்சனம் செய்தார். அப்போது கூட தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு கூட அவர் திருந்துவாரா என்று பார்த்தால் திருந்தவில்லை. மாறாக, நமது நிறுவனத் தலைவர் பேரறிஞர் அண்ணாவையே விமர்சிக்க தொடங்கிவிட்டார்.

 

Natham Viswanathan speech about annamalai

 

ஆக, இந்த அளவுக்கு தைரியத்தையும், பின்னணியும் கொடுத்தது யார்?. கூட்டணி தர்மம் என்பதை கூட உணராமல், தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்துகின்ற அரசியலை அண்ணாமலை செய்து வந்தார். இந்த தேர்தல் பிரதமரை தேர்ந்தெடுக்கும் தேர்தல். இந்த தேர்தலில் மோடியை பிரதமராக்க வேண்டும் என்பதையெல்லாம் மறந்துவிட்டு அண்ணாமலை தனியாக செயல்பட்டு வந்தார். மோடி, பிரதமர் ஆனால் என்ன ஆகவில்லை என்றால் என்ன என்பது போல் இந்த மாநிலத்தில் அண்ணாமலையின் பெயரை மட்டுமே சொல்ல வேண்டும் என்று செயல்பட்டு வந்தார். 

 

அதே போல், என் மண் என் மக்கள் என்று பெயர் வைத்து நடைபயணம் செய்து கொண்டு வருகிறார். இது தவறான தலைப்பு, அதனால் இதனை ஆதரிக்கக்கூடாது எனறு நான் தலைமையிடத்தில் அப்போதே கூறினேன். ஏனென்றால், இந்த மண் அவருக்கு சொந்தமானதா?. இரண்டு வருடத்திற்கு முன்பு வரை கர்நாடகாவில் காக்கி சட்டை போட்ட போலீஸ் அதிகாரி. அவருக்கு இந்த மண்ணுக்கும் என்ன உரிமை உண்டு. இந்த தமிழக மக்கள் அனைவருமே அவருடைய மக்கள் போல் தலைப்பு வைத்துள்ளார். 

 

இந்த தமிழகத்திற்காக தன்னையே அர்ப்பணித்த தலைவர்கள் எல்லாம் இருக்கின்ற போது நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் போல், இரண்டு வருடத்திற்கு முன் அரசியலில் வந்து விட்டு இது என் மண் என் மக்கள் என்று உரிமை கொண்டாடி சொல்கிறார். இப்படி செய்கின்ற போது அதை நாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க வேண்டுமா?. அதுமட்டுமல்லாமல், நமது தலைவர்களையே அவமானப்படுத்தி விமர்சனம் செய்கின்ற போது அதையும் நாம் சகித்துக்கொண்டு கூட்டணியில் இருக்க வேண்டுமா?. 

 

Natham Viswanathan speech about annamalai

 

அதே போல், அதிமுகவின் கொள்கைக்கும், அவருடைய கொள்கைக்கும் எந்தவிதத்திலும் ஒத்துவராது. ஆக, கொள்கைகளிலே நிறைய முரண்பாடு இருக்கிறது. மேலும், தன்னை தானே பில்டப் செய்து கொண்டிருக்கிறார். எனக்கு தெரிந்து ஒரு பக்குவம் இல்லாத ஒரு அரசியல்வாதியாக தான் அண்ணாமலை இருக்கிறார். ஒரு முதிர்ச்சி இல்லை. அதற்கு காரணம் அவருக்கு அனுபவம் இல்லை. அவராக ஒரு கருத்தை சொல்கிறார். பின்பு அவராகவே நான் பின்வாங்க மாட்டேன் என்று கூறுகிறார். யாரோ இவரை வற்புறுத்தியது போல், நான் யாருக்காகவும் மாற மாட்டேன் என்று சொல்லி கொண்டு இருக்கிறார். உங்களை யார் ஒரு கருத்தை சொல்ல வேண்டும் என்று சொன்னது?. அதற்கு பின்வாங்க வேண்டும் என்று யார் தான் உங்களிடம் சொன்னது?.  என்னை பொறுத்தவரை அவர் முதிர்ச்சியற்ற பக்குவமில்லாத அரசியல்வாதியாக தான் இருக்கிறார்.

 

கொள்கை ரீதியாகவும் முரண்பாடு இருக்கிறது. அவருடைய அணுகுமுறையிலும் முரண்பாடு இருக்கிறது. இதற்காக தான் நாங்கள் கூட்டணியை முறித்தோம். எல்லாவகையிலும், ஒரு பொருத்தமற்ற கூட்டணியில் இருந்து நாம் விலகியிருக்கிறோம். இப்போது அவரை சுற்றி ஒரு கூட்டத்தை வைத்துக்கொண்டிருக்கிறார். அவர்கள் அனைவரும் பா.ஜ.க.வில் இருந்தவர்கள் இல்லை. பல்வேறு கட்சிகளில் இருந்து சங்கமமாகியிருக்கிற ஒரு புதிய வரவு தான் அவர்கள். அவர்களெல்லாம் சிந்தாந்த ரீதியில் பா.ஜ.க.வை ஏற்றுக்கொண்டவர்கள் அல்ல. இன்றைக்கு தமிழ்நாட்டில் இருக்கின்ற பாதி ரவுடிகளும் பா.ஜ.க.வில் தான் இருக்கிறார்கள். எந்த கட்சியிலும் இடமில்லை என்றால், மத்தியில் ஆளக்கூடிய கட்சியால் பாதுகாப்பு இருக்கும் என்ற எண்ணத்தில் பா.ஜ.க.வில் இணைகிறார்கள். 

 

சித்தாந்த ரீதியில் இருக்கின்ற பழைய பா.ஜ.க.காரர்கள் இன்னும் அப்படியே தான் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம், இவருடைய ஆட்ட பாட்டங்களை எல்லாம் விரும்பவில்லை. மேலும், பா.ஜ.க.வினுடைய சித்தாந்தங்கள் நமக்கு ஒரு போதும் ஒத்துவராது. அனைத்து வகையிலும் முரண்பாடான ஒரு இயக்கம். பா.ஜ.க  கட்சி தமிழ்நாட்டில் உள்ள எந்த இடத்திலும் டெபாசிட் கூட வாங்காது. அவர்களுக்கென்று சொந்த சக்தி என்று ஒன்றும் கிடையாது. நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பின்பு அவர்களுடைய சக்தி என்ன என்பதை அவர்களே தெரிந்துகொள்வார்கள். அதிமுக எந்த அளவுக்கு ஒரு மாபெரும் இயக்கம் என்பதையும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின்பு தான் தெரிந்துகொள்வார்கள்.” என்று கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

தடுமாறிய ஹெலிகாப்டர்; உயிர் தப்பிய அமித்ஷா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள் களை கட்டியிருக்கும் நிலையில் பீகாரில் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில நிமிடங்கள் தடுமாறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சில நிமிடங்கள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி அலைந்த ஹெலிகாப்டர் பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.