Skip to main content

ஜனாதிபதி கையில் லகான்! 

Published on 21/05/2019 | Edited on 21/05/2019

 

தேர்தல் முடிவுகளை எதிர்கொள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளும் பல்வேறு ஆலோசனைகளை நடத்தி வருகின்றன. எந்த கூட்டணிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கும் ? என்கிற புள்ளிவிபர கணக்குகள் தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. 

 

parliament


 

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு புது கூட்டணி உருவாகும் வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். தேர்தல் முடிவுகளைப் பொறுத்து  ஆட்சி அமைக்க யாரை அழைக்க வேண்டும் என்கிற அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு. பாஜகவுக்கு எதிரான கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்களைப் பெற்றிருந்தால் அக்கூட்டணியைத்தான் ஆட்சி அமைக்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அழைக்க வேண்டும். 


 

 

ஆனால், பெரும்பான்மைக்குத் தேவையான 272 இடங்களை பாஜகவோ அல்லது அதன் கூட்டணி கட்சிகளோ பெறாமல்  இருக்கும் சூழலில், தனிப்பெரும் கட்சியாக பாஜக அதிக இடங்களை கைப்பற்றியிருந்தால் அக்கட்சியை ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன. அதாவது, பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை எதிர்க்கட்சிகள் கூட்டணி பெற்றிருந்தாலும், தனிப் பெரும் கட்சியாக பாஜக வெற்றிப்பெற்றால் ஆட்சி அமைக்க பாஜகவுக்கே முதல் வாய்ப்பை ஜனாதிபதி வழங்குவார் என தெரிகிறது. இதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு. 
 

1989-ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் அதிக இடங்களை பெற்றிருந்தது. ஆனால், பெரும்பான்மைக்கான இடங்கள் காங்கிரஸுக்கு கிடைக்கவில்லை. இருப்பினும் அப்போதைய, ஜனாதிபதி வெங்கட்ராமன், ஆட்சி அமைக்க ராஜீவ்காந்தியை அழைத்தார். ஆனால், பெரும்பான்மை இல்லாததால் ஜனாதிபதியின் முடிவை நிராகரித்தார் ராஜீவ்காந்தி. அதன் பிறகு, வி.பி.சிங் பிரதமரானர். 


 

 

அதேபோல, 1996-ல் தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களை கைப்பற்றியது வாஜ்பாய் தலைமையிலான பாஜக. அப்போதைய ஜனாதிபதி சங்கர்தயாள் சர்மா, ஆட்சி அமைக்க வாஜ்பாயை அழைக்க, மறுத்துவிட்டார் வாஜ்பாய். ஜனாதிபதிக்கு இப்படிப்பட்ட அதிகாரம் இருக்கிறது. அதனை ஏற்பதும் மறுப்பதும் சம்பந்தப்பட்ட தலைவர்களின் ஜனநாயக உணர்வுகளைப் பொருத்தது. ஆக, பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் தனிப்பெரும் கட்சியாக பாஜக வெற்றிப்பெற்றால்  ஆட்சி அமைக்கும் முதல் வாய்ப்பை பாஜகவுக்கு கொடுக்க, தனது அதிகாரத்தை ஜனாதிபதி  பயன்படுத்துவார் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். ஆக, புதிய ஆட்சியின் லகான் ஜனாதிபதி கையில் இருக்கிறது !
 

 

சார்ந்த செய்திகள்