Skip to main content

“கட்சிக்காரர்களை குவித்து... மூன்று வேளை சாப்பாடு வழங்கி...” - செந்தில் பாலாஜி காட்டம்

Published on 28/05/2023 | Edited on 28/05/2023

 

Minister Senthil Balaji on Income Tax Department's investigation

 

“வேலுமணி போன்றவர்கள் வீட்டில் சோதனை நடைபெற்ற போது கட்சிக்காரர்களை அங்கே கொண்டு வந்து குவித்து மூன்று வேளை அவர்களுக்கு சாப்பாடு வழங்கி இடையூறு செய்தது போல் இங்கு யாரும் செய்யவில்லை” என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

 

கரூரில் நடைபெற்று வரும் அகில இந்திய கூடைப்பந்து போட்டி பரிசளிப்பு விழாவில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  “எனக்கு வேண்டியவர்கள் அவர்களது நண்பர்கள் என செவி வழி செய்தியாக எனக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெறுகிறது என செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. வருமானவரிச் சோதனைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம். சோதனைகள் முடிந்த பிறகு முழு விவரங்கள் தெரிய வரும். சுவர் ஏறி குதித்து உள்ளே வந்தது, இரண்டு பெரிய பைகளைக் கொண்டு வந்ததன் காரணமாக கேள்விகள் கேட்கப்பட்டு வாக்குவாதம் நடைபெற்றிருக்கிறது. யார் வீட்டிலும் திடீரென்று உள்ளே நுழையும் போது அடையாள அட்டை காண்பியுங்கள் என்று கேட்பது வழக்கம்.

 

கதவை தட்டும்போது நீங்கள் யார் என கேட்டு கதவை திறப்பது வழக்கம். மாவட்ட காவல் அதிகாரி தகவல் இல்லை எனக் கூறியதை எதிர்க்கட்சித் தலைவர் புரிந்து கொள்ளாமல் விமர்சித்துள்ளார். அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதற்கு லாயக்கற்றவர். வேலுமணி போன்றவர்கள் வீட்டில் சோதனை நடைபெற்ற போது கட்சிக்காரர்களை அங்கே கொண்டு வந்து குவித்து மூன்று வேளை அவர்களுக்கு சாப்பாடு வழங்கி இடையூறு செய்தது போல் இங்கு யாரும் செய்யவில்லை. சந்தேகப்பட்டு அங்கு வந்தவர்களையும் உடனடியாக அங்கிருந்து செல்லுமாறு கூறி தற்போது சோதனை சுமுகமாக நடைபெற்று வருகிறது. சொந்த தொகுதியிலேயே வெற்றி பெற முடியாமல் தோல்வியடைந்து மக்களால் புறக்கணிக்கப்பட்டவர் ஜெயக்குமார். தொலைக்காட்சிகளில் காமெடியனாக வந்து போய்க்கொண்டிருக்கிறார். அவரது கூற்றுக்கெல்லாம் நான் பதில் அளிக்க விரும்பவில்லை.

 

சட்டமன்றத் தேர்தலின்போது நான் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்த சமயத்தில் ரைடு நடத்தினார்கள். எத்தனையோ ரெய்டுகளை சந்தித்து இருக்கிறேன். இன்னும் எத்தனை ரைடு வந்தாலும் சந்திப்பேன். ஓராயிரம் சோதனைகளை நடத்தினாலும் சரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நலத்திட்டங்களினால் இந்த அரசு மிகப் பெரிய வரவேற்பினை மக்கள் மத்தியில் பெற்றிருக்கிறது. பாண்டிச்சேரி உள்ளிட்ட 40 தொகுதியிலும் நாங்கள் வெற்றி பெறுவதை எத்தனை ரைடு நடத்தினாலும் தடுக்க முடியாது” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்