Skip to main content

“கமலுக்காக விட்டுக்கொடுத்துவிட்டேன்..” - மன்சூர் அலிகான் பேச்சு!

Published on 18/03/2021 | Edited on 18/03/2021

 

I gave up for Kamal Mansoor Alikhan speech


தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி தமிழகம் முழுக்க ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. மேலும், பதிவான வாக்குகள் மே 2ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுமென இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால், அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டிவருகின்றனர். கட்சிகள் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்து தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன. 

 

தமிழகம் முழுவதும் முக்கியக் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்துவரும் நிலையில், சிறிய கட்சிகளைச் சேர்ந்தவர்களும் சுயேச்சைகளும் வேட்புமனுத் தாக்கல் செய்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் மன்சூர் அலிகான் சுயேச்சையாகப் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய மன்சூர் அலிகான், அண்மையில் தமிழ் தேசிய புலிகள் கட்சி என்ற கட்சியைத் தொடங்கினார். ஆனால், இந்தக் கட்சிக்கு இன்னும் அங்கீகாரம் கிடைக்காத நிலையில், தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட அவர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். 

 

வேட்பு மனுத் தாக்கல் செய்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்த மன்சூர் அலிகான், “கோவை தெற்கு தொகுதியில்தான் போட்டியிட விரும்பினேன். ஆனால், அங்கு மநீம தலைவர் கமல் போட்டியிடுவதால் விடுக்கொடுத்துவிட்டு தொண்டாமுதுரில் போட்டியிடுகிறேன். நான் திண்டுக்கல்லில் செய்ததை கமல் கோவையில் செய்துவருகிறார். அவர் வெற்றி பெற என் வாழ்த்துகள்” என்றார். 

 

தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக அமைச்சர் வேலுமணி, திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி ஆகியோரை எதிர்த்துப் போட்டியிட நடிகர் மன்சூர் அலிகான் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 


 

சார்ந்த செய்திகள்