Skip to main content

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மீது வழக்குப் பதிவு; செய்தியாளர்கள் மத்தியில் ஆவேசம்

Published on 22/02/2023 | Edited on 22/02/2023

 

Case registered against Naam Tamil candidate; Frenzy among reporters

 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பரபரப்புகளுக்கு பஞ்சம் இல்லை. அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் சர்ச்சைகளும் விவாதங்களும் அதிகரித்த வண்ணமே உள்ளது.

 

தேர்தல் களத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா நவநீதனை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டு இருந்தார். பிரச்சாரக் கூட்டத்தில் அருந்ததியர்கள் குறித்து சர்ச்சையான கருத்தை சீமான் சொன்னதால் அவருக்கு எதிராக அச்சமூக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அவரை கைது செய்யச் சொல்லியும் சாலை மறியல் செய்தனர். 

 

இந்நிலையில், ஈரோடு கிழக்கு நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா நவநீதன் விதிமுறைகளை மீறியதாக அவர் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தேர்தலுக்கு பிரச்சாரம் மேற்கொள்ளும் போது எந்தக் கட்சியின் வேட்பாளராக இருந்தாலும் தேர்தல் அலுவலகத்தில் இதற்கான அனுமதியைப் பெற வேண்டும். எந்த வழித் தடத்தில் எத்தனை பேர் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்கள் என்ற விபரங்களை அளித்து பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 20 ஆம் தேதி உரிய விதிமுறைகளைப் பின்பற்றாமல், அதனை மீறி ஆலமரத் தெருவில் பரப்புரை மேற்கொண்டதாகத் தேர்தல் பறக்கும் படையினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரைப் பெற்ற ஈரோடு தெற்கு காவல்துறையினர் 171F என்ற பிரிவின் கீழ் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மற்றும் அக்கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் 30 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளார்கள்.

 

மேலும் அருந்ததியினர் குறித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவதூறாகப் பேசியதாக புகார் அளித்ததை அடுத்து வேட்பாளர் மேனகாவிற்கு தேர்தல் அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும் நோட்டீஸ் பெறப்பட்ட 24 மணி நேரத்திற்குள் நோட்டீஸ்க்கு உரிய விளக்கத்தை தராவிட்டால் வேட்பாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேர்தல் அதிகாரி எச்சரித்துள்ளார். இந்நிலையில் தன் மீது தவறாக வழக்குப் பதிவு செய்துள்ளதாகத் தேர்தல் நடத்தும் ஆணையரிடம் மேனகா நவநீதன் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த வேட்பாளர் மேனகா, “தேர்தல் பரப்புரையில் அனுமதி பெறாமல் பரப்புரை செய்துள்ளதாக வழக்கு பதிவு செய்துள்ளனர். அதை ரத்து செய்ய சொல்லி மனு அளித்துள்ளோம். அதையும் தாண்டி வரும் நாட்களிலும் பரப்புரை மேற்கொள்ள அனுமதி வேண்டி மனு கொடுத்துள்ளோம். தேர்தல் ஆணையம் ஆளும் கட்சிக்கு ஆதரவாக உள்ளது. மக்களுக்கு வழங்கப்படும் பரிசுப் பொருட்கள் குறித்து தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுத்தார்கள்.” என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்