Skip to main content

“பா.ஜ.கவின் சதித்திட்டத்தின் முகமாக ஸ்வாதி மாலிவால் இருக்கிறார்” - டெல்லி அமைச்சர் விளக்கம்

Published on 17/05/2024 | Edited on 17/05/2024
Delhi Minister explains Swati Maliwal is the face of BJP's conspiracy

டெல்லி மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவரும், ஆம் ஆத்மி கட்சி எம்.பியுமான ஸ்வாதி மாலிவால், போலீசாரிடம் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். இது தொடர்பாக கடந்த 13ஆம் தேதி காலை ஸ்வாதி மாலிவால் போலீசாரை தொடர்புகொண்டு, ‘டெல்லி முதல்வர் இல்லத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிப்பட்ட உதவியாளர் பிபவ் குமாரால் தாக்கப்பட்டேன்’ எனக் குற்றச்சாட்டு முன்வைத்திருந்தார். அந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில், போலீசார் உடனடியாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் இல்லத்தை அடைந்த போது அங்கு எம்.பி.ஸ்வாதி மாலிவால் இல்லை என்று கூறப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இதற்கு பா.ஜ.கவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளரால், தான் தாக்கப்பட்டதாக போலீசாரிடம் கூறிய ஆம் ஆத்மி எம்.பி ஸ்வாதி மாலிவால், இந்தச் சம்பவம் குறித்து போலீசாரிடம் எந்தவித புகாரும் அளிக்கவில்லை. இருப்பினும், ஸ்வாதி மாலிவாலை தாக்கியதாக, அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிச் செயலாளர் பிபவ் குமார் மீது நேற்று (16-05-24) பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், இந்தச் சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். 

இந்தச் சம்பவம் குறித்து ஸ்வாதி மாலிவாலிடம் ஐந்து மணி நேரம் விசாரணை நடத்தி டெல்லி போலீஸார் வாக்குமூலம் பெற்றனர். அதில் ஸ்வாதி மாலிவால் கூறியிருப்பதாவது, “அரவிந்த் கெஜ்ரிவாலை நான் சந்திக்க சென்றபோது அவரது உதவியாளர் பிபவ் குமார் உள்ளே வந்தார். திடீரென்று, அவர் எந்த தூண்டுதலும் இல்லாமல் என்னைத் தாக்க ஆரம்பித்தார். மேலும், என்னை துஷ்பிரயோகம் செய்தார். நான் தொடர்ந்து கத்திக் கொண்டிருக்கும் போது அவர் என்னை 7 முதல் 8 முறை அறைந்தார். நான் மீண்டும் மீண்டும் உதவிக்காக கத்திக் கொண்டிருந்தேன் ஆனால் யாரும் வரவில்லை. அவர் என் மீது பாய்ந்தார். மிருகத்தனமாக இழுத்து, வேண்டுமென்றே என் சட்டையை மேலே இழுத்தார். அவர் என் மார்பு, வயிறு மற்றும் இடுப்புப் பகுதியில் உதைத்தார். எனக்கு மாதவிடாய் வந்துவிட்டது என்று சொன்னேன், ஆனால் அவர் தொடர்ந்து, மீண்டும் மீண்டும் முழு பலத்துடன் என்னைத் தாக்கினார்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Delhi Minister explains Swati Maliwal is the face of BJP's conspiracy

இதற்கிடையே, ஸ்வாதி மாலிவாலை உதவியாளர் பிபவ் குமார் தாக்குவது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், இந்தச் சம்பவம் குறித்து டெல்லி அமைச்சர் அதிஷி இன்று (17-05-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைத்ததில் இருந்தே, பா.ஜ.க.வினர் திணறி வருகின்றனர். இதன் காரணமாக, பா.ஜ.க சதி திட்டம் தீட்டுகிறது. இதன் கீழ், ஸ்வாதி மாலிவால், மே, 13ம் தேதி காலை, அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளார். இதற்கு முகமாகவும், சிப்பாயாகவும் இருந்தவர், சுவாதி மாலிவால். அவர்கள் முதல்வர் மீது குற்றம் சாட்ட திட்டமிட்டனர். ஆனால் அவர் காப்பாற்றப்பட்டார். அதன் பிறகு, அவர் பிபவ் குமாரை தாக்கியதாகக் போலீசில் அளித்த புகாரில் கூறியுள்ளார். இன்று வெளியாகியுள்ள காணொளியில், அவர் முதல்வர் இல்லத்தில் வசதியாக அமர்ந்து காவல்துறை அதிகாரிகளை மிரட்டுவது போன்ற காட்சிகள் வெளியாகியுள்ளன. வீடியோவில் பிபவ் குமாரை மிரட்டுவதும் காணப்பட்டது. அவரது உடைகள் கிழிக்கப்படவில்லை அல்லது தலையில் காயம் எதுவும் காணப்படவில்லை” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்