Skip to main content

தந்தை, மகன் உயிரிழப்பு... எஸ்.ஐ-க்கள் 2 பேர் பணியிடை நீக்கம்!

Published on 23/06/2020 | Edited on 23/06/2020

 

கிளைச்சிறையில் மகனும், அரசு மருத்துவமனையில் தந்தையும் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட சாத்தான்குளம் காவல் நிலையத்தின் எஸ்.ஐ-க்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதோடு, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட அனைவரும் கூண்டோடு மாற்றம் செய்யப்பட்டனர்.

 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலையத்திற்குட்பட்ட அரசரடி விநாயகர் கோவில் தெருவினை சேர்ந்தவர் பென்னிக்ஸ். எம்.எஸ்.டபிள்யூ.வரை படித்த இவர் ஊரில் காமராஜர் சிலை அருகே APJ மொபைல்ஸ் எனும் பெயரில் செல்போன் கடை நடத்தி வருகின்றார். ஊரடங்கின்போது நிர்ணயிக்கப்பட்ட நேரத்தினை மீறி கடை நடத்தியதாக இவரையும், இவரது தந்தையான ஜெயராஜையும் சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு வரவழைத்த இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் இவர்களை தாக்கி இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறைக்கு அனுப்பியுள்ளனர். இதில் தந்தை தனக்கு மிகுந்த காயமிருப்பதாகக் கூற கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்க, மகன் பென்னிக்ஸோ கோவில்பட்டி கிளைச்சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து நேற்றிரவு மகன் பென்னிக்ஸ் சிறையிலேயே இறக்க, தந்தை ஜெயராஷ் மறுநாள் அதிகாலையில் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

 

காவல்துறை தாக்கியதாலே இருவரும் உயிரிழந்தனர் என உள்ளூர் மக்கள் சாலையில் குவிந்து போராடிய நிலையில், திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சண்முகநாதன் மற்றும் கன்னியாகுமரி எம்.பி.வசந்த் குமார் ஆகியோர் மக்களோடு மக்களாக திரள, மாவட்ட நிர்வாக தரப்பில் ஆட்சியர் சந்தீப் நந்தூரி மற்றும் மாவட் காவல்துறை கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் உள்ளிட்டோர் மக்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்து மக்களின் கோரிக்கைகளை கேட்கலானர். பேச்சுவார்த்தையின் முடிவில், “சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணியாற்றும் உதவி ஆய்வாளர்கள் 2 பேர் பணியிடை நீக்கமும், ஆய்வாளர் உள்ளிட்ட அனைவரும் கூண்டோடு மாற்றமும் செய்யப்பட்டுள்ளனர். குடும்பத்தினருக்கு அரசு வேலை, நிதி வழங்குவது குறித்து அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது, மாஜிஸ்திரேட் தலைமையில் விசாரணை நடைபெற்று வருவதால், விசாரணை அறிக்கை அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

 

சார்ந்த செய்திகள்