Skip to main content

பெண்களை மீண்டும் புகை அடுப்பிற்கு மாற்றியுள்ளது அதிமுக அரசு! - கனிமொழி விமர்சனம்!

Published on 25/03/2021 | Edited on 25/03/2021

 

AIADMK has turned womens back into the smoke oven

 

சிதம்பரம் அருகே கீரப்பாளையத்தில், திமுக மகளிர் அணித் தலைவர் கனிமொழி புவனகிரி தொகுதியில் வேட்பாளர் சரவணனை ஆதரித்து வேனில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “புவனகிரி தொகுதியில் மீண்டும் போட்டியிடும் சரவணன் கடந்த 5 ஆண்டுகளில் எதிர்க்கட்சியாக இருந்தாலும் இந்தப் பகுதியில் உள்ள மக்களின் நல்லது, கெட்டதிற்கு வந்து நின்றவர்.

 

தொகுதி மக்களுக்குத் தேவையான பணிகளைச் செய்துள்ளார். ஆனால் எதிரணியில் நிற்கும் அருண்மொழித்தேவன் இந்தப் பகுதி மக்கள் மத்தியில் முகம் காட்டாதவர். தற்போது வாக்குக்காக மக்களைச் சந்தித்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக அரசு இளைஞர் மற்றும் இளம் பெண்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை. தளபதி ஆட்சி அமைந்தவுடன் தமிழகத்தில் உள்ள இளைஞர் மற்றும் இளம்பெண்களுக்கு அரசு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.

 

இதில் வெளிமாநிலத்தவர்களுக்குப் பணி கிடையாது. திமுக ஆட்சியின் போது செய்த முற்போக்கான திட்டங்கள் இன்றும் தமிழக அளவில் உள்ளது. அதிமுக அரசு எந்த ஒரு முற்போக்கான திட்டத்தையும் கொண்டு வரவில்லை. எரிவாயு உருளை விலை ஏற்றத்தை, கண்டுகொள்ளாத எடப்பாடி தற்போது எரிவாயுவை தருகிறோம் எனத் தேர்தலுக்காக கூறியுள்ளார். இதனை மக்கள் நம்ப மாட்டார்கள். எரிவாயு உருளையின் விலை ஏற்றத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாத ஏழை மக்களை, மீண்டும் புகை அடுப்பிற்கு மாற்றியுள்ளது அதிமுக அரசு. இதனால், ஏழை மக்கள் தினம் தினம் கண்ணீர் வடித்து வருகிறார்கள்.

 

எனவே, பொதுமக்களுக்கு நல்வாழ்வு அளிக்கும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்” என அவர் பேசினார். இந்தக் கூட்டத்தில், கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக மற்றும் திராவிடர் கழகம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் திரளாகக் கலந்துகொண்டனர். இதேபோல் பெரியபட்டி சிதம்பரம் தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் போட்டியிடும் அப்துல் ரகுமானுக்கு 'ஏணி' சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

 

 

 

சார்ந்த செய்திகள்