Skip to main content

அ.தி.மு.க. கூட்டணியில் வெளியான தொகுதிப் பங்கீடு குறித்த தகவல்?

Published on 03/03/2024 | Edited on 04/03/2024
A.D.M.K. Information about the allocation of seats in the alliance

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரச்சாரக் குழு, தேர்தல் விளம்பரக் குழுக்கள் அமைக்கப்பட்டன. அதன்படி இந்தக் குழுவினர் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அதிமுக சார்பில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான விருப்ப மனு விநியோகமும் தொடங்கியுள்ளது.

A.D.M.K. Information about the allocation of seats in the alliance

அதே சமயம் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் உடன் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கடந்த 5 ஆம் தேதி (05.02.2024) திடீரென சந்தித்துப் பேசியதாகக் கூறப்பட்டது. இந்த சந்திப்பின் போது மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து இருவரும் பேசியதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன. அப்போது அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சார்பில் 10 மக்களவைத் தொகுதிகள் கேட்கப்பட்டதாகவும், அதற்கு ஆரணி, சிதம்பரம், கடலூர், தருமபுரி உள்ளிட்ட 6 மக்களவைத் தொகுதிகளை பா.ம.க.வுக்கு ஒதுக்கீடு செய்ய அ.தி.மு.க. முன்வந்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது. மேலும் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.கவை இணைப்பது தொடர்பாக ராமதாஸ் உடன் சி.வி. சண்முகம் தைலாபுரத்தில் கடந்த 24 ஆம்  தேதி (24.02.2024) மாலை மீண்டும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார் எனத் தகவல் வெளியாகி இருந்தது.

A.D.M.K. Information about the allocation of seats in the alliance

இத்தகைய சூழலில் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி கடந்த 28 ஆம் தேதி (28.02.2024) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சி கண்டிப்பாக தொடர்கிறது. இந்த தேர்தலில் புரட்சி பாரதம் கட்சி போட்டியிடுகிறது. அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற அனைத்து தேர்தல் பணிகளையும் தொடங்குவோம். திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் ஆகிய 3 மக்களவைத் தொகுதிகளை விருப்ப தொகுதிகளாக தெரிவித்து அதற்கான பட்டியலை அ.தி.மு.க.விடம் கொடுத்துள்ளோம். இதன் மூலம் அ.தி.மு.க. கூட்டணியில் ஒரு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளோம். அதிலும் குறிப்பாக திருவள்ளூர் தொகுதி சொந்த தொகுதி என்பதால் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து தெரிவித்துள்ளோம். இது தொடர்பாக அ.தி.மு.க.விடம் இருந்து பேச்சுவார்த்தைக்கு இன்னும் அழைக்கவில்லை. அடுத்த வாரம் பேச்சுவார்த்தைக்கு கண்டிப்பாக அழைக்கலாம். அப்போது எங்களது கோரிக்கை குறித்து தெரிவிப்போம்” எனத் தெரிவித்திருந்தார்.

A.D.M.K. Information about the allocation of seats in the alliance

இதனைத் தொடர்ந்து கூட்டணி தொடர்பாக தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதாவை சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, கே.பி. அன்பழகன், பெஞ்சமின் ஆகியோர் கடந்த 1 ஆம் தேதி (01.03.2024) சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பிற்கு பின்னர் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஆணையின்படி, தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். கூட்டணி குறித்து விவாதிக்க அ.தி.மு.க. - தே.மு.தி.க. இடையே இரு தரப்பிலும் குழு அமைக்கப்படும். இதன் பின்னர் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெறும்” எனத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள், ‘கூட்டணி உறுதி என எடுத்துக் கொள்ளலாமா?’ என கேள்வி எழுப்பினர். அதற்கு எஸ்.பி. வேலுமணி, “நேரடியாக வந்து சந்தித்து பேசியதை வைத்தே புரிந்து கொள்ளுங்கள்” என சூசகமாகப் பதிலளித்திருந்தார்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் 25 தொகுதிகளில் அ.தி.மு.க. நேரடியாக போட்டியிட முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதோடு அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் சிறிய கட்சிகளின் வேட்பாளர்களை இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி புரட்சி பாரதம் கட்சிக்கு திருவள்ளூர் தொகுதியும், மூவேந்தர் முன்னேற்றக் கழகத்திற்கு மயிலாடுதுறை தொகுதியும் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், பா.ம.க.வுக்கு 6 முதல் 7 தொகுதிகளையும், தே.மு.தி.க.வுக்கு 3 முதல் 4 தொகுதிகளையும், எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு மத்திய சென்னை தொகுதியும், சமத்துவ மக்கள் கட்சிக்கு திருநெல்வேலி தொகுதியை ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

சார்ந்த செய்திகள்