Skip to main content

ஆணவக்கொலை வழக்கு... நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...

Published on 27/08/2019 | Edited on 27/08/2019

கேரளாவின் கோட்டயம் பகுதியில் நடந்த ஆணவ கொலையில் குற்றம்சாட்டப்பட்ட 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி கோட்டயம் நகராட்சி அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

 

verdict in kerala youth kevin case

 

 

கோட்டயம் கல்லூரியில் படித்து வந்த கெவின் ஜோசப் - நீனு இருவரும் காதலித்து வந்தனர். இரண்டு குடும்பங்களும் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துவந்த நிலையில், இருவரும் பதிவு  திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இருவரும் திருமண பதிவிற்கான கூட்டு விண்ணப்பத்தை கோட்டயத்தில் உள்ள ஒரு துணை பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்திருந்தனர்.

இதற்கு நினுவின்  குடும்பத்தினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் நினுவின் உறவினர்கள் சிலர் ஒரு நாள் திடீரென கெவின் வீட்டிற்கு சென்று, வீட்டை சூறையாடினர். பின்னர் கெவினையும், அவரது நண்பர் அனிஷையும் அந்த கும்பல் கடத்தி சென்றது. நண்பன் அனிஷை பலமாக தாக்கி பாதி வழியில் காரிலிருந்து இறக்கிவிட்டு, கெவினை கடத்தி சென்றுள்ளனர்.

இந்த நிலையில் கெவின் உடல் மே 28 அன்று கொல்லம் மாவட்டத்தில் ஒரு ஆற்றில் கண்டெடுக்கப்பட்டது. அவர் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக குற்றசாட்டு எழுந்தது. இந்த கெவின்  ஆணவக்கொலையில் 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கோட்டயம் நகராட்சி அமர்வு நீதிமன்றம் ஆகஸ்ட் 22 ம் தேதி  இந்த 14 பேரில் 10 பேர் குற்றவாளி என தீர்ப்பு அளித்தது.

கெவின் காதலியான நீனுவின் சகோதரர் சானு சாக்கோ,  நியாஸ் மோன், இஷான் இஸ்மாயில், ரியாஸ் இப்ராஹிம்குட்டி, மனு முரளிதரன், ஷிபின் சஜாத், நிஷாத், பாசில் ஷெரிப் மற்றும் சானு ஷாஜகான் ஆகியோர் குற்றவாளிகளாக  அறிவிக்கப்பட்டனர்.  நீனுவின் தந்தை சாக்கோ ஜான் மற்றும் ரமிஸ் ஷெரீப், ஷினு ஷாஜகான், விஷ்ணு ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இன்று  10 குற்றவாளிகளுக்கும் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் ஒவ்வொரு குற்றவாளிக்கும் ரூ .40,000 அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்