Skip to main content

“நான் சாதாரண வேலைக்காரன் அல்ல...” - பிரதமர் மோடி பேச்சு

Published on 13/05/2024 | Edited on 13/05/2024
PM Modi speech in bihar

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக மே 7ஆம் தேதியும் பல்வேறு மாநிலங்களில் நடந்து முடிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அடுத்த கட்டத் தேர்தலான நான்காம் கட்ட வாக்குப்பதிவு, நாடு முழுவதும் 9 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசம் உட்பட மொத்தம் 96 மக்களவைத் தொகுதிகளில் இன்று (13.05.2024) நடைபெற்று வருகிறது. 

அதன்படி ஆந்திரா - 25 தொகுதிகளுக்கும், தெலங்கானா - 17 தொகுதிகளுக்கும், பீகார் - 5 தொகுதிகளுக்கும், ஜார்க்கண்ட் - 4 தொகுதிகளுக்கும், மத்தியப் பிரதேசம் - 8 தொகுதிகளுக்கும், மகாராஷ்டிரா - 11 தொகுதிகளுக்கும், ஒடிசா - 4 தொகுதிகளுக்கும், உத்தரப்பிரதேசம் - 13 தொகுதிகளுக்கும், மேற்குவங்கம் - 8 தொகுதிகளுக்கும், ஜம்மு - காஷ்மீர் 1 தொகுதிக்கும் என 96 மக்களவைத் தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மக்களவைத் தேர்தலுடன் ஆந்திராவில் உள்ள 175 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், ஒடிசாவில் உள்ள 28 பேரவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில், பீகார் மாநிலத்தில் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், பீகார் மாநிலம், ஹஜிபூர் தொகுதியில் பா.ஜ.க கூட்டணி கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரதமர் மோடி இன்று (13-05-24) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், “மோடி உங்கள் வேலைக்காரன். சாதாரண வேலைக்காரன் மட்டுமல்ல, 24 மணி நேரமும் இருப்பவன். உங்கள் கனவுகள் என் தீர்மானம். இதற்காக, 2047 க்கு 24/7 மணி நேரமும் உழைப்பேன். நீங்கள் எனக்கு ஒரு பொறுப்பைக் கொடுத்தீர்கள், அந்தப் பொறுப்பை நான் மிகவும் நேர்மையாக நிறைவேற்றுகிறேன். அதே நேர்மையுடன், எனது அறிக்கையை மக்களுக்கு வழங்குகிறேன். 60 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியை விட எனது 10 ஆண்டுகளில் செய்த வளர்ச்சியை இன்று உலகமே உற்று நோக்குகிறது.

தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஏழை மற்றும் நலிந்த பிரிவினரின் வலியை புரிந்து கொண்டு அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது. உலக அளவில் இந்தியாவின் மதிப்பை உயர்த்தும் வகையில் இந்தத் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தேர்தல் நாட்டின் நம்பகத்தன்மையையும், கௌரவத்தையும், அந்தஸ்தையும் அதிகரிப்பதற்காக நடத்தப்பட்டு வருகிறது. அதற்காக ஒவ்வொரு இந்தியனும் பெருமிதம் கொள்ள வேண்டும்” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்