Skip to main content

கடலில் சிக்கும் போதைப்பொருட்கள்; மீண்டும் மீண்டும் குஜராத்தில் பரபரப்பு 

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
narcotics at sea; Repeated agitation in Gujarat

குஜராத் மாநிலம் வழியாக இந்தியாவிற்கு அதிகளவில் போதைப் பொருள்கள் கடத்தப்பட்டு வருவது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக குஜராத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குஜராத்தின் அகமதாபாத்தில், நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடங்களை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கண்டுபிடித்தனர். அப்போது அங்கு இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட இதன் மதிப்பு சுமார் ரூ.300 கோடி எனப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் மதிப்பிட்டுள்ளனர். இது தொடர்பாக 7 பேர் கைதாகியுள்ளனர். நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.300 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

முன்னதாக குஜராத்தில் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி படகு ஒன்றில் இருந்து 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 3 ஆயிரத்து 300 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும், இதே போன்று கடந்த மார்ச் மாதம் 12ஆம் தேதி  சுமார் ரூ.480 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

நேற்று குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே 602 கோடி ரூபாய் மதிப்புள்ள 86 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக இதுவரை 14 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். இந்நிலையில் குஜராத் கடல் பகுதியில் மீண்டும் 173 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்திய கடலோர காவல் படை மற்றும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து அந்தப் பகுதியில் சோதனை நடத்தியதில் 173 கிலோ போதைப் பொருள் சிக்கியது. இந்திய மீன்பிடிப் படகில் இருந்த இரண்டு பேரை இது தொடர்பாக கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இப்படி தொடர்ச்சியாக குஜராத்தில் அதிகப்படியான போதைப் பொருட்கள் பிடிக்கப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சார்ந்த செய்திகள்