Skip to main content

"இந்துக்களுக்கும் இந்துத்துவவாதிகளுக்கும் இடையே போர் நடக்கிறது" - அமேதியில் பாத யாத்திரை நடத்திய ராகுல் காந்தி!

Published on 18/12/2021 | Edited on 18/12/2021

 

rahul gandhi

 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலின் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாக கருதப்படுவதால், இந்தத் தேர்தலில் வெற்றிபெற அனைத்து கட்சிகளும் பல்வேறு வியூகங்களை வகுத்து செயல்பட்டுவருகின்றனர்.

 

இந்நிலையில், ராகுல் காந்தி இன்று (18.12.2021) உத்தரப்பிரதேசத்தின் அமேதியில், 6 கிலோமீட்டர் தூரத்திற்குப் பாத யாத்திரை நடத்தினார். இந்தப் பாத யாத்திரையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ப்ரியங்கா காந்தியும் உடனிருந்தார். அதனைத்தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, இந்துக்களும், இந்துத்துவவாதிகளுக்கும் இடையே போர் நடப்பதாகக் கூறியுள்ளார்.

 

அமேதியில் ராகுல் காந்தி பேசியதாவது, “அமேதியில் உள்ள ஒவ்வொரு பாதையும் இன்னும் அப்படியே உள்ளது. ஒரேயொரு வித்தியாசம் என்னவென்றால் மக்களின் கண்களில் அரசின் மீதான கோபம் உள்ளது. அநீதிக்கு எதிராக நாம் இன்னும் ஒன்றுபட்டுத்தான் உள்ளோம். நான் 2004இல் அரசியலுக்கு வந்தேன். அமேதியில்தான் நான் முதல்முறையாக தேர்தலில் போட்டியிட்டேன். அமேதி மக்கள், அரசியல் பற்றி எனக்கு நிறைய கற்று தந்துள்ளனர். அரசியலில் நீங்கள் எனக்கு வழிகாட்டியுள்ளீர்கள். உங்கள் அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

 

ஒரு இந்து தன் வாழ்நாள் முழுவதையும் உண்மையின் பாதையில் நடத்துகிறான். ஒரு இந்து தனது பயத்திற்கு ஒருபோதும் அடிபணிய மாட்டான். அவன் எல்லா அச்சங்களையும் எதிர்கொள்கிறான். அவர் தனது பயத்தை ஒருபோதும் கோபமாக, வெறுப்பாக மாற விடமாட்டார். ஆனால் ஒரு இந்துத்துவவாதி ஆட்சியில் இருக்க பொய்களை மட்டுமே பயன்படுத்துகிறார். ஒரு இந்துவின் பாதை சத்தியாகிரகம் என்று மகாத்மா காந்தி கூறினார். இன்று இந்துக்களுக்கும் இந்துத்துவவாதிகளுக்கும் இடையே போர் நடந்துவருகிறது. இந்துக்கள் சத்தியாக்கிரகத்தை நம்பினால், இந்துத்துவவாதிகள் சட்டாகிரகத்தை (அரசியல் பேராசை) நம்புகிறார்கள். இன்று நம் நாட்டில் பணவீக்கம், வலி, சோகம் ஆகியவை இருக்கிறதென்றால் அது இந்துத்துவவாதிகளின் வேலை. இன்றைய நிலையை நீங்கள் அறிவீர்கள். வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் பணவீக்கம் என்பது முதலமைச்சரோ, பிரதமரோ பதிலளிக்கமால் இருக்கப்போகும் மிகப்பெரிய கேள்விகள். பிரதமர் மோடி சில நாட்களுக்கு முன் கங்கையில் நீராடினார். ஆனால் அவர் வேலையில்லா திண்டாட்டம் பற்றி பேசமாட்டார்.

 

இளைஞர்கள் ஏன் வேலைவாய்ப்பை இழக்கிறார்கள் என்பதை நான் உங்களுக்குச் சொல்கிறேன். பிரதமரின் சில முடிவுகளால் நடுத்தர மக்கள் மற்றும் ஏழைகள் மோசமாகப் பாதிக்கப்பட்டனர். இது பெரிய அளவிலான வேலையின்மையை ஏற்படுத்தியது. பணமதிப்பு நீக்கம், தவறாக அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி, கரோனா நெருக்கடியின்போது எந்த உதவியும் அளிக்காதது இந்தியாவில் வேலையின்மைக்கு முக்கிய காரணங்கள். இன்று லடாக்கில் இந்தியாவின் நிலத்தை சீனா பறித்து அதை தனக்கு சொந்தமாக்கிக் கொண்டது. ஆனால், பிரதமர் எதுவும் கூறவில்லை. நிலம் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்று பிரதமர் கூறுகிறார். சிறிது நேரம் கழித்து, நிலம் எடுத்துக்கொள்ளப்பட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது.” இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்