Skip to main content

ஒன்றிய அமைச்சரவை இலாகாக்கள் மாற்றம்!

Published on 08/12/2023 | Edited on 08/12/2023
Change of Union Cabinet portfolios

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பல கட்டங்களாக தேர்தல்கள் நடந்து முடிந்தது. இதனையடுத்து, மிசோரத்தை தவிர்த்து மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 3ஆம் தேதி நடைபெற்றது.

அதில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. மேலும், தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று முதன் முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. அதே போல்,  கடந்த 4ஆம் தேதி மிசோரமில் நடந்த வாக்கு எண்ணிக்கையில், ஸோரம் மக்கள் இயக்கம் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. 

இந்த தேர்தல்களில் மத்திய அமைச்சராக இருந்த சிலரும், எம்.பி.க்கள் சிலரும் போட்டியிட்டனர். அதில், மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், நீர்வளத்துறை இணை அமைச்சர் பிரகலாத்சிங் பட்டேல் உட்பட 10 எம்.பி.க்கள் வெற்றி பெற்றுள்ளனர். மேலும், நரேந்திரசிங் தோமர் மற்றும் பிரகலாத்சிங் பட்டேல் ஆகியோர் மத்திய பிரதேச சட்டசபைக்கு எம்.எல்.ஏ.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஒரு மாநிலத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பு வகிக்க முடியாத காரணத்தினால், பா.ஜ.க மத்திய அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். 

அதில், நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர், கடந்த 4ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடரானது வருகிற டிசம்பர் 22ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த விவாதத்தில் ஆளும் பா.ஜ.க எம்.பி.க்களும், எதிர்க்கட்சி எம்.பி.க்களும் காரசாரமாக விவாதித்து வருகின்றனர். இதனையடுத்து, நேற்று முன் தினம் (06-12-23) நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றது. அப்போது மத்திய அமைச்சர்கள் நரேந்திரசிங் தோமர், பிரகலாத்சிங் பட்டேல் மற்றும் ரேணுகா சிங் சரூடா ஆகியோர் நாடாளுமன்றத்திற்கு வந்து தங்களது ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தனர். இதனையடுத்து, அவர்கள் அளித்த ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி திரெளபதி முர்மு ஏற்றுக்கொண்டதாக ஜனாதிபதி மாளிகை நேற்று (07-12-23) அறிக்கை வெளியிட்டு இருந்தது.

இந்த நிலையில், அவர்கள் வகித்து வந்த துறைகளை, 4 அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்புகளாக ஒதுக்கப்பட்டுள்ளது.  அதன்படி, பழங்குடி நலத்துறை மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டா, வேளாண்துறைக்கு கூடுதல் பொறுப்பு வகிப்பார். மேலும், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழிநுட்ப மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் , ஜல்சக்தி துறை இணை அமைச்சராக கூடுதல் பொறுப்பு வகிப்பார். அதே போல், வேளாண்துறை இணை அமைச்சர் சோபா சுரண்டலேவுக்கு, உணவு பதப்படுத்துதல் துறை இணை அமைச்சர் பொறுப்பையும், சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவாருக்கு, பழங்குடி நலத்துறை இணை அமைச்சர் பொறுப்பும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இந்த நியமனங்களை ஜனாதிபதி செய்திருப்பதாக அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்