Skip to main content

தூத்துக்குடி மக்கள் உறுதுணையோடு ஆலையை தொடங்குவோம்! - அனில் அகர்வால்

Published on 24/05/2018 | Edited on 24/05/2018

தூத்துக்குடி மக்கள் உறுதுணையோடு ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் தொடங்குவோம் என அந்த ஆலையின் தலைவர் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார்.
 

anil

 

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்தப் போராட்டத்தின் நூறாவது நாளான மே 22ஆம் தேதியன்று, ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக நடந்துசென்றனர். அப்போது தடியடி நடத்திய காவல்துறையினர் மீது பொதுமக்களும் பதில் தாக்குதல் நடத்தத் தொடங்கினர். இந்தத் தாக்குதலின் போது காவல்துறையினர் பொதுமக்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இதுவரை 13 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். அதுமட்டுமின்றி, காவல்துறையினரின் அத்துமீறல் காரணமாக தூத்துக்குடியில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
 

இதுகுறித்து ஸ்டெர்லைட் ஆலையின் தலைவர் அனில் அகர்வால் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ‘தூத்துக்குடியில் நேற்று நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்ததில் இருந்து நான் சோகத்தில் உள்ளேன். இது மிகவும் துரதிஷ்டவசமானது. என் இரங்கலை உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தெரிவித்துக்கொள்கிறேன். ஸ்டெர்லைட் ஆலை வருடாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக மூடப்பட்டுள்ளது. நாங்கள் அரசு மற்றும் நீதிமன்றத்தின் அனுமதி கிடைத்தவுடன் ஆலையை மீண்டும் திறந்து செயல்படுத்த இருக்கிறோம். மேலும், நாங்கள் அரசு மற்றும் நீதிமன்றம் வழங்கியிருக்கும் உத்தரவுகளை மிகத்தீவிரமாக பின்பற்றுகிறோம். தூத்துக்குடி வாழ் மக்களின் செழிமையான வாழ்வை உறுதிசெய்வதில் முழு கவனம் செலுத்துகிறோம். அதேபோல், தூத்துக்குடி மற்றும் தமிழ்நாட்டின் செழுமைக்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கிடைக்கும்படி முழுமையாக செயல்படுவோம் என்பதில் உறுதியளித்து, தூத்துக்குடி மக்களின் ஆதரவோடு ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் தொடர இருக்கிறோம். மீண்டும் ஒருமுறை தெரிவித்துக்கொள்கிறேன். நேற்றைய சம்பவம் என்னை மிகவும் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது’ என பேசியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்