Skip to main content

“பா.ஜ.க., அ.தி.மு.க.வுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
People will teach BJP and ADMK a lesson CM MK Stalin

பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசால் கடந்த 2019 ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் (C.A.A.) கொண்டுவரப்பட்டது. அதில் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னர் இந்தியா வந்தடைந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது. இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. பெரிய அளவில் போராட்டங்களும் நடைபெற்றன.

அதாவது இந்த சட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க சி.ஏ.ஏ. வகை செய்கிறது. அதே சமயம் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறும் இஸ்ஸாமிய மக்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்படவில்லை. மேலும் தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கவும் சிஏஏ சட்டத்தில் வழிவகை செய்யப்படாததும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி இருந்தார். இந்நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டம் இன்று முதல் (11.03.2024) அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு தமிழக கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “குடியுரிமை என்ற மனிதநேயக் கொள்கையை மதம் - இனத்தால் வேறுபடுத்தும் பிளவுவாதக் கொள்கையாக மாற்றியது ஒன்றிய பா.ஜ.க. அரசு. இசுலாமிய மதத்தவரையும், இலங்கைத் தமிழரையும் வஞ்சிக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை இயற்றியது ஒன்றிய பா.ஜ.க அரசு.

People will teach BJP and ADMK a lesson CM MK Stalin

அதனை தி.மு.க. உள்ளிட்ட ஜனநாயகச் சக்திகள் கடுமையாக நாடாளுமன்றத்தில் எதிர்த்தன. ஆனால் பா.ஜ.க.வின் பாதம் தாங்கியான அ.தி.மு.க. ஆதரித்து வாக்களித்ததால்தான் அச்சட்டம் நிறைவேறியது. மக்கள் எதிர்ப்பு காரணமாக அந்தச் சட்டத்தை இதுநாள் வரையில் அமல்படுத்தாமல் பா.ஜ.க. வைத்திருந்தது.  திராவிட முன்னேற்றக் கழக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் நாள், இந்திய நாட்டின் ஒற்றுமையையும், மத நல்லிணக்கத்தையும் போற்றிப் பாதுகாக்கவும், அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மதச்சார்பின்மைக் கோட்பாட்டினை நிலைநிறுத்தவும், இந்திய குடியுரிமைத் திருத்தச் சட்டம் - 2019ஐ, ரத்து செய்திட ஒன்றிய அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் அரசினர் தனித் தீர்மானத்தை நிறைவேற்றினோம்.

இப்போது, தேர்தலில் தனது அனைத்து அஸ்திரங்களும் எடுபடாமல் போன நிலையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதன் மூலமாகக் கரையேற முயற்சிக்கிறார் பிரதமர் மோடி. தேர்தல் நேரத்தில் மக்களின் உணர்ச்சிகளைச் சீண்டி அரசியல் ஆதாயம் அடையப் பார்க்கிறார் பிரதமர். அமைதிமிகு இந்தியாவில் பிளவுமிகு சட்டத்தைக் கொண்டு வந்த பா.ஜ.க.வையும், அந்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த அடிமை அ.தி.மு.க.வையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்! தக்க பாடம் புகட்டுவார்கள்!” எனத் தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்