Skip to main content

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. தினகரன் பக்கம் மாறியது ஏன்? (EXCLUSIVE)

Published on 23/02/2018 | Edited on 23/02/2018


 

Prabhu T.T.V.Dinakaran

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பிரபு. இவர் இன்று காலை சென்னை ஆர்.கே.நகர் சுயேட்சை எம்எல்ஏவான டி.டி.வி. தினகரனை சந்தித்து தனது ஆதரவினை தெரிவித்துள்ளார். அடையாறில் உள்ள தினகரன் வீட்டில் இந்த சந்திப்பு நடந்தது. 
 

பிரபுவின் தகப்பனார் ஐய்யப்பா. தொடக்க காலத்தில் இருந்தே அதிமுகவில் உள்ளவர். இவர் தியாகதுருவம் அதிமுக ஒன்றிய செயலாளராகவும், மாவட்ட கவுன்சிலராகவும் இருந்தார். பிரபுவின் தாயார் கைலம்மாள் ஒன்றிய துணை சேர்மனாக இருந்தார். பிரபு இளைஞர், இளம்பெண்கள் பாசறையின் ஒன்றிய செயலாளராகவும் பதவி வகித்தார். ஐயப்பா கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டார், ஆனால் பிரபு பி.இ., பட்டதாரி என்பதால் அவருக்கு சீட் ஒதுக்கியது அதிமுக மேலிடம். எதிர்த்து நின்ற திமுக வேட்பாளர் காமராஜை விட சுமார் 3 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிப்பெற்றார். 
 

Kumaraguru Ulundurpet AIADMK mlaஎடப்பாடி பழனிசாமி முதல் அமைச்சரான பின்னர் விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளரும், உளுந்தூர் பேட்டை எம்எல்ஏவான் குமரகுரு, மாவட்டத்தில் உள்ள தன்னைப்போன்ற எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என யாரையும் மதிப்பதில்லை என்று பலரிடம் சொல்லி வந்துள்ளார். இந்த மனஸ்தாபம் எடப்பாடி வரை அவ்வப்போது சென்றது. அவரும், இருவருக்கிடையே பஞ்சாயத்து செய்து அனுப்பி வைப்பார். பிரபுவுக்கு கட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்படாதது கட்சியில் அவரது வளர்ச்சியை குமரகுரு தடுப்பது, எம்எல்ஏ பதவியில் சுதந்திரமாக செயல்பட முடியாமல் தடுப்பது போன்றவற்றை அறிந்த தினகரன் தரப்பு பிரபுவை வளைத்தது. அதனைத் தொடர்ந்துதான் தினகரனை இன்று சந்தித்துள்ளார் பிரபு. இந்த சந்திப்பு எடப்பாடி பழனிசாமி அணிக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 

தினகரனை சந்தித்துவிட்டு வெளியே வந்த பிரபு செய்தியாளர்களிடம், மக்கள் ஆதரவு உள்ளதால் டிடிவி உடன் சேர்ந்தேன். டிடிவி தினகரனின் சேவை நாட்டுக்கு தேவை. மேலும் சில எம்எல்ஏக்கள் டிடிவி தினகரன் அணிக்கு வருவார்கள். கள்ளக்குறிச்சியை தலைமையாக கொண்டு மாவட்டமாக அறிவிக்கக்கோரி பலமுறை மனு அளித்தும் எந்த முயற்சியில் எடுக்கவில்லை. மேலும் தொகுதி தேவைக்காக பலமுறை அமைச்சர்களிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். மேலும் விரைவில் டிடிவி அணியில் உள்ள ஒருவர் முதல்வராவார் எனவும் தெரிவித்தார்.
 

சார்ந்த செய்திகள்