Skip to main content

பாரதிராஜா, சீமான் ‘கும்பலுக்கு’ ரஜினி மன்றம் கண்டனம்!

Published on 18/04/2018 | Edited on 18/04/2018
rajini f

காவேரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்தியில் ஆளும் மோடி அரசு, தமிழகத்துக்கு துரோகம் செய்துள்ளது. இது தமிழகத்தில் பெரும் அதிருப்தியையும், கோபத்தையும் மக்களிடம் உருவாக்கியுள்ளது. எதிர்கட்சிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், மறியல்கள் செய்து வருகின்றன.

ஐ.பி.எல் போட்டி சென்னையில் நடைபெறுவதை நிறுத்த வேண்டும் என தமிழ் அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. அதையும் மீறி ஐ.பி.எல் போட்டி நடந்தது. இதனை கண்டித்து சென்னை அண்ணா சாலையில் இயக்குநர் பாரதிராஜா, அமீர், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், நாம் தமிழர் கட்சி சீமான் போன்றோர் போராடினர். அப்போது போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தி போலீஸார் கைது செய்தனர்.

இந்த பிரச்சனையில், காவலர்களை தாக்கியவர்கள் மீது கடுமையான சட்டநடவடிக்கை எடுக்க வேண்டுமென நடிகர் ரஜினிகாந்த், டுவிட்டரில் கருத்து வெளியிட்டார். இது தமிழ் உணர்வாளர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.  இதனால் ரஜினியை, இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், சீமான், வேல்முருகன் போன்றவர்கள் கண்டித்து பேசிவருகின்றனர்.

rajini fans statement



இந்த நிலையில் தான் வேலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதில், தமிழகத்தில் அசாதாரண கூழ்நிலை நிலவும் இந்த நேரத்தில் எங்கள் தலைவர் ரஜினிகாந்த் அவர்களை பற்றி விமர்சிப்பவர்களுக்கு, காவிரி பிரச்சனை என்பது இன்றைய நேற்றைய பிரச்சனையல்ல. பல ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டிருக்கும் பிரச்சனை இது. மத்தியிலும் சரி, மாநிலத்திலும் சரி பல ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்ட போதிலும் இதற்கான தீர்வு இன்றும் தீர்க்கப்படவில்லை. இந்நிலையில் உச்சநீதிமன்றம், காவேரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென்று மத்திய அரசுக்கு அறிவுறுத்தியது. இது ஒரு மாநிலத்திற்கு சம்மந்தப்பட்ட பிரச்சனை அல்ல. ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு சம்மந்தப்பட்ட பிரச்சனை. இதற்கு மத்திய அரசும், இந்த நான்கு மாநில அரசுகளும் ஒன்று சேர்ந்து பேசி தீர்வுகாண வேண்டிய பிரச்சனை இது. இதில் ஒரு நடிகராகவோ, தனிப்பட்ட மனிதராகவோ ரஜினிகாந்த் அவர்களால் தீர்வு காண முடியாது என்பது தெரிந்தும் அவர்களின் மீது தேவையற்ற விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

மக்களுக்கு பிரச்சனைகள் வரும்போதெல்லாம் தலைவர் ஒரு தனிமனிதனாக தமிழக மக்களின் நலனுக்காக தொடர்ந்து தன் கருத்தை பதிவு செய்தும் வருகிறார். இந்நிலையில் நாட்டில் ஏற்படும் பிரச்சனைகள் அனைத்திற்கும் ரஜினி என்ன செய்துவிட்டார்? ரஜினி என்ன செய்துவிட்டார் என்று பேசுபவர்களுக்கு ஒன்றை பதிவு செய்ய விரும்புகிறோம். நாம் மாநிலத்தை ஆளும் அரசை கேட்பதை விட்டுவிட்டு தமிழகத்தில் ஒரு சில கும்பல் ரஜினிகாந்த் அவர்களை மட்டுமே குறிவைத்து விமர்சனம் செய்வது எந்த விதத்திலும் நியாயமில்லை. தயவு செய்து இப்படியெல்லாம் பேசுவதை விட்டுவிட்டு நாம் அனைவரும் ஒன்றிணைந்து நம் நாட்டில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் சட்ட ரீதியாகவோ, அரசு ரீதியாகவோ அனைவரும் கலந்து பேசி தீர்வுகாண வேண்டியது மிக முக்கியம். இதை தவிர்த்து சிலர் தன் சுயநலத்திற்காக, தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ள, விளம்பரப்படுத்திக்கொள்ள முயலுவதை ஒருபோதும் நாம் அனுமதிக்க கூடாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம் என வேலூர் மாவட்ட தலைமை ரஜினி மக்கள் மன்ற செயலாளர் சோளிங்கர் ரவி, மாவட்ட இணை செயலாளர் நீதி என்கிற அருணாச்சலம் இருவரும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

சார்ந்த செய்திகள்