Skip to main content

வெடிகுண்டு மிரட்டல் புரளி; பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்!

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
 All 13 schools will function as usual

சென்னை அண்ணாநகர், பாரிமுனை, கோபாலபுரம், ராஜா அண்ணாமலைபுரம், ஜெ.ஜெ. நகர், திருமழிசை ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் 13 தனியார் பள்ளிகளுக்கு நேற்று (08.02.2024) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இந்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு பள்ளியில் இருந்து மாணவர்களை பெற்றோர்கள் அழைத்துச் சென்றனர். பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததையடுத்து மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

அதே சமயம் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து பொதுமக்கள் யாரும் பீதியடைய வேண்டாம் என போலீஸ் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. பள்ளிகளுக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் காவல்துறையினர் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக சென்னை மாநகர காவல்துறை சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், ‘வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தினோம். பள்ளிகளில் சோதனை செய்ததில் எந்தவித மர்மப் பொருளும் கைப்பற்றப்படவில்லை’ என்று கூறப்பட்டது. இந்நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்ட 13 தனியார் பள்ளிகளும் இன்று (09.02.2024) வழக்கம்போல் செய்ல்படும் என  தமிழக அரசு அறிவித்துள்ளது. போலீசார் நடத்திய சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்