Skip to main content

தமிழிசைக்கு முன் முழக்கமிட்ட பெண்ணுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்! - தலைவர்கள் கடும் கண்டனம்!

Published on 03/09/2018 | Edited on 03/09/2018
tamili flight


பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன், இன்று காலை சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் சென்றிருந்த போது அதே விமானத்தில் வந்த இளம்பெண் ஒருவர், பாஜக ஒழிக.. பாஜகவின் பாசிச ஆட்சி ஒழிக என்று விமானத்துக்குள்ளேயும், தூத்துக்குடி விமான நிலையத்திலும் முழக்கமிட்டுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த தமிழிசை அந்த பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில், விமான நிலைய போலீசார் தமிழிசையை சமாதானப்படுத்தினர். பின்னர் அந்த இளம்பெண் மீது புகார் அளித்த தமிழிசை அங்கிருந்து தென்காசி புறப்பட்டு சென்றார்.

பின்னர் நடந்த விசாரணையில், அந்த பெண் தூத்துக்குடியைச் சேர்ந்த மருத்துவரின் மகள் சோபியா என்பதும், கனடாவில் பயின்று வரும் அவர் சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் பயணித்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, சோபியா மீது புதுக்கோட்டை காவல்நிலைய போலீசார் 290, 505 என்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து, சோபியா தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, பாஜகவுக்கு எதிராக தமிழிசை முன் முழக்கமிட்ட குற்றச்சாட்டில் சோபியாவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் அளித்து நீதிபதி உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவை அடுத்து, சோபியா நெல்லை கொக்கிரகுளம் மகளிர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

“பா.ஜ.க வின் பாசிச ஆட்சி ஒழிக!” என முழக்கமிட்டதால் பெண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து தனது டிவிட்டர் பதில் கருத்து தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,

ஜனநாயக விரோத - கருத்துரிமைக்கு எதிரான தமிழக அரசின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது! உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும்! அப்படி சொல்பவர்களை எல்லாம் கைது செய்வீர்கள் என்றால் எத்தனை இலட்சம் பேரை சிறையில் அடைப்பீர்கள்? நானும் சொல்கின்றேன்! “பா.ஜ.க வின் பாசிச ஆட்சி ஒழிக!” என தனது டிவிட்டர் பதிவில் கூறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது டிவிட்டர் பதிவில், ’தமிழிசை பயணம் செய்த விமானத்தில் பாஜக-விற்கு எதிராக முழக்கமிட்ட இளம்பெண் கைது // நானும் சொல்கிறேன்.. பாசிச பாஜக ஆட்சி ஒழிக!!’ என தனது பதிவில் கூறிப்பிட்டுள்ளார்.
 

சார்ந்த செய்திகள்