Skip to main content

தமிழனென்பதால் பாத்திரம் கழுவ வைத்தார்கள்... ஆனால், இன்று? - 5 நிமிட எனர்ஜி கதை  

Published on 19/03/2018 | Edited on 19/03/2018

1990ஆம் வருடம்... மும்பை பாந்த்ரா ரயில் நிலையம்... 17 வயது சிறுவன் அல்லது இளைஞன்... சென்னையிலிருந்து தன்னை அழைத்து வந்தவரை காணவில்லை... சுற்றியிருப்பவர்கள் பேசும் மொழி புரியவில்லை... ஒரு ஆர்வத்திலும் அசட்டு தைரியத்திலும், யாரிடமும்  சொல்லாமல் ஊரை விட்டு வந்துவிட்டான். இப்பொழுது, இந்த சூழ்நிலையில், தனக்கு சற்றும் சம்மந்தமில்லாத இந்த மாநகரில் என்ன செய்வது? இன்னொரு தமிழரொருவர் இவனைப் பார்த்து பாவமாக உணர்ந்து அருகே இருந்த மாரியம்மன் கோவிலுக்கு அழைத்துச் சென்று, அங்கிருந்த இன்னும் சில தமிழர்களிடம் இவனது நிலையை சொல்கிறார். ஆளுக்குக் கொஞ்சம் காசு போட்டு, பையனை திருப்பி சென்னைக்கு ரயிலேற்றலாம் என்று முடிவு செய்து அவனிடம் சொல்கிறார்கள். அவனோ மறுக்கிறான். 'இங்கே தான் என் எதிர்காலம் என்று முடிவு செய்து வந்துவிட்டேன். நான் போகமாட்டேன். எனக்கு ஏதாவது வேலை வாங்கித் தாங்க' என்றான். 'ஊரிலிருந்து வந்தது என்னவோ அசட்டு தைரியத்தில் தான். ஆனால், அங்கேயே இருக்கவேண்டுமென்று முடிவு செய்தது அசல் தைரியத்தில்.
 

Prem Ganapathy



தூத்துக்குடி அருகே நகலாபுரத்தில் பிறந்து பத்தாம் வகுப்பு வரை மட்டும் படித்து, குடும்ப சூழ்நிலையால் சென்னைக்கு வந்து அங்கு ஓரிரு கடைகளில் வேலை பார்த்து, அது போதாது, இன்னும் பெரிய ஊருக்குச் செல்ல வேண்டும், முன்னேற வேண்டுமென்று மும்பைக்கு வந்த பிரேம் கணபதிக்கு முதலில் கிடைத்தது ஒரு பேக்கரியில் பாத்திரம் கழுவும் வேலை. ஆம், அப்போதைய பம்பாயில் மதராசிகளுக்கு அந்த நிலை தான். கடைகளில், உணவகங்களில் வாடிக்கையாளர்களை கையாளும் வேலைகளில் மராத்திக்காரர்களும் ஹிந்திக்காரர்களும் மங்களூர்காரர்களும்தான் முன்னுரிமை பெற்றார்கள். ஹிந்தி தெரிந்தாலும் கூட மதராசிகளுக்கு அந்த வேலைகளை எளிதில் தர மாட்டார்கள். பாத்திரம் கழுவும் வேலையை ஏற்றுக்கொண்டு செய்தார், கடை செயல்பாடுகளை கவனித்தார். ஆறு மாதங்களில் அடுத்த வேலை, அதற்கடுத்த வேலை என பாத்திரம் கழுவும் வேலைதான் கொடுத்தார்கள். அவர்கள் கொடுத்ததுதான் அந்த வேலை, ஆனால் பிரேம் அதை மட்டும் கவனிக்கவில்லை, முழுதாய் கவனித்தார். பின்னொருநாள் ஒரு டீக்கடையில் கடைகள், அலுவலகங்களுக்குச் சென்று தேனீர் கொடுக்கும் 'சாய் வாலா' வேலை. இப்படி, பாத்திரம் கழுவுபவராய்  தொடங்கிய பிரேம் கணபதி, இன்று இந்தியாவில் 52, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா என்று பல வெளிநாடுகளில் 10 கிளைகள் என தோசை சாம்ராஜ்யமாக திகழும் 'தோசா பிளாஸா' உணவகங்களின் அதிபர்.
 

Dosa plaza



'எல்லா ரௌடிகளுக்கும் ஒரே ஃபிளாஷ்பேக் தான?' என்பது போல் 'எல்லா ஹோட்டல்களுக்கும் ஒரே  ஃபிளாஷ்பேக் தான?' என்று கேட்டால், பதில் கிட்டத்தட்ட 'ஆம்' தான். ஆனால், இவர் வித்தியாசமாக செய்தது என்ன? செய்த எல்லாவற்றையும் வித்தியாசமாக செய்ததுதான். 

'சாய் வாலா'வாக இருந்தபோதே, 'இதெல்லாம் ஒரு வேலையா என்று சலித்துக்கொள்ளாமல். 'இதுதான் நம்ம வேலை' என்று வாடிக்கையாளர்களிடம் அன்பாகப் பேசி, அவர்களுக்குத் தேவையான வகையில், நேரத்தில், ஒவ்வொருவருக்கும் பிடித்த சுவையில் டீ கொடுத்து ஒரு கட்டத்தில், பத்து சாய் வாலாக்கள் இருந்தாலும் வாடிக்கையாளர்களையே 'கணபதிகிட்ட சாய் கொடுத்து விடுங்கள்' என்று கேட்க வைத்தார்.   

காசு சேர்த்து தள்ளுவண்டியில் கடை ஆரம்பித்த போது, தள்ளுவண்டினா அழுக்கான இடத்தில, அழுக்கு கைலியோட, கழுவாத தட்டுல போட்டு தருவாங்க என்ற நம்பிக்கையை உடைக்கும் வண்ணம் கிளவுஸ், தொப்பி அணிந்து சுத்தமாக பரிமாறினார். தள்ளுவண்டிக்கு காரில் வந்து  சாப்பிடுவதெல்லாம் மும்பையில் இவர் கடையில் தான் முதலில் நடந்தது.
 

Prem with Abdul Kalam



முதல் கடை பிடித்த போது, சின்னதாக இருந்தாலும் தனக்கென ஒரு அடையாளம் வேண்டும் என்று கடைக்கு பெயர் வைக்க முடிவு செய்தார். 'கோகோ கோலா' என்ற பெயர் இவருக்குப் பிடித்தது. அது போல ரைமிங்காக வைக்க எண்ணினார். இவரது கடை ஸ்பெஷல் தோசா, இவர் இருந்தது மும்பை 'வஷி பிளாஸா', ரெண்டையும் சேர்த்து பேர் வச்சாரு மாசா... ஆம், பிரேம் சாகர் 'தோசா பிளாஸா' என்று முதல், சின்ன கடையையே பெயருடன் துவங்கினார். தள்ளுவண்டியில் கடை நடத்தியபோதே, 'மெக் டொனால்ட்' உணவகத்தை தன் ஆதர்சமாக வைத்து செயல்பட்டார்.  

படித்தது பத்தாம் வகுப்புதான், ஆனாலும் 90களிலேயே, முதல் கடை ஆரம்பித்த சமயத்திலேயே கணினி, இணையம் எல்லாம் இயக்கக்  கற்றுக்கொண்டார். உலகின் பிரபல உணவகங்களைப் பற்றி படித்து, அவர்களைப் போல ஒரு பிராண்டாக உருவாக்க நினைத்தார், உழைத்தார், உருவாக்கினார்.

இன்று சென்னையில் '60 வகை தோசைகள்', '80 வகை தோசைகள்' என்றெல்லாம் கடைகள் பார்க்கிறோம். அதற்கெல்லாம் தொடக்கம் இவர்தான். நூற்றுக்கும் மேற்பட்ட தோசை வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளார் பிரேம் கணபதி.   

இன்றும், மெக்சிகன் சில்லியின் சுவை, ஆஸ்திரேலிய மக்களின் தேவை என புதுசு புதுசாக  கற்றுக்கொண்டே இருப்பதாகக் கூறுகிறார் பிரேம் கணபதி. செய்தது எந்த வேலையாக இருந்தாலும்  அதில் சிறந்து விளங்கியது, எந்த புள்ளியிலும் தேங்கி நிற்காமல் அடுத்தடுத்த தேடலுடன் இருந்தது, தொடர்ந்து கற்றுக்கொண்டே இருந்ததுதான் பிரேம் கணபதி நமக்கு சொல்லும் சக்ஸஸ் சீக்ரெட்.