Skip to main content

டி.பி.யை தெரிந்துகொள்ளுங்கள்...

Published on 24/03/2018 | Edited on 24/03/2018
World TB Day1

 

மார்ச் 24 - உலக காசநோய் தினம்  

காசநோய் என்றால் சட்டென ஞாபகத்துக்கு வராது, டிபி என்றால் நிச்சயம் அனைவருக்கும் தெரியும். டிபி என்பது டியூபர்குளோசிஸ் பாக்டீரியா என்கிற பெயரின் சுருக்கம். அது ஒரு நோய்க்கிருமி. இந்த நோயால் இறப்பவர்கள் உலகளவில் அதிகம்.

காற்றின் வழியாக டியூபர்குளோசிஸ் பாக்டீரியா என்கிற கிருமி மனித உடலில் புகுந்து காசநோயை உருவாக்குகிறது. இந்நோயை பரிசோதனைகள் வழியாகத்தான் கண்டறிய முடியும். தொடர்ச்சியாக சளி இருப்பது, எடை குறைவு, காய்ச்சல், மார்புவலி, இரவில் வியர்த்தல், கை, கால்கள் பலம் குன்றுதல் போன்றவை இதன் அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் இருந்தால் பரிசோதனை செய்து காசநோயா என்பதை அறிந்துக்கொண்டு அதன்பின்பு சிகிச்சை பெறவேண்டும்.

இந்நோய் வந்தால் மனிதனின் நுரையீரலை தான் முதலில் பாதிக்கும். அடுத்ததாக மூளை, கிட்னி, முதுகெலும்பு போன்ற அனைத்தையும் பாதிப்படைய செய்யும். முறையான தொடர் சிகிச்சை பெறவில்லையெனில் உடலை உருக்கிவிடும். அது கொடுக்கும் வலிக்கு இறந்துவிடலாம் என அலறவைக்கும். காசநோயின் இறுதிக்கட்டத்திலும் கூட கடுமையான சிகிச்சை முறைகளைப்  பெற்றால் இறப்பில் இருந்து தப்பிக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

காற்றின் வழியாக காசநோய் கிருமிகள் பரவி மனிதர்களை நோயாளியாக்குகின்றன. இந்நோய் வந்தவர்கள் இருமினால் அதன்வழியாக வெளியேறும் நோய் கிருமிகள் மற்றவர்களுக்கும் பரவச்செய்யும். மூன்று விதமான சிகிச்சைகள் வழியாக காசநோய் தாக்கியவர்களை மருத்துவர்கள் குணப்படுத்துகின்றனர்.

உலக அளவில் 2016 ல் மட்டும் புதியதாக 1 கோடியே 6 லட்சம் மக்களுக்கு காசநோய் உருவாகியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. சில நோய்கள் வந்தால் நிச்சயம் இறப்பார்கள் என்கிறது மருத்துவ உலகம். அப்படிப்பட்ட நோய்கள் பட்டியலில் காசநோய் 9வது இடத்தில் உள்ளது. இந்த நோயால் உலகஅளவில் ஆண்டுக்கு சுமார் 15 லட்சம் மக்கள் இறக்கின்றனர். இந்த நோய் அதிக அளவில் இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை, சீனா, தென்னாப்பிரிக்கா போன்ற தேசங்களிலேயே உள்ளது. அதுவும் 50 சதவிதம் என்கிறது மருத்துவ உலகம்.

1996 மார்ச் 24 முதல் உலக காசநோய் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் மக்களுக்கு காசநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 1882 மார்ச் 24ந்தேதி ராபர்ட் காச் என்பவர் தான் முதன் முதலில் காசநோய் குறித்த நோய் காரணிகளை கண்டறிந்தார். அந்த நாளையே உலக காசநோய் நாளாக அறிவித்தது உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.

காசநோய் வந்தவர்கள் எனத்தெரிந்தால் அரசாங்கமே ஆயிரக்கணக்கான ரூபாய் செலவில் மருந்து, மாத்திரைகள் தந்து உயிரை காக்கின்றது. 2025க்குள் இந்த நோயை முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கையில் இந்தியா போன்ற சர்வதேச நாடுகள் பல இறங்கியுள்ளன. அதற்காக தனியார் துறையை இதில் ஈடுப்படுத்துதல், புதிய மருந்துகள் தருதல், காசநோயாளிகள் நோய் குணமாக்கிக்கொள்ள ஊக்கத்தொகை வழங்குவது என்கிற முடிவில் காசநோய் பிரிவு உள்ளன.