Skip to main content

அப்பவே அப்படி! முதல் நேர்காணலிலேயே முதிர்ச்சி - ஏ.ஆர்.ரஹ்மானின் வெற்றி ரகசியம்

Published on 10/08/2020 | Edited on 10/08/2020
a.r.rahman

 

இன்று நம்முன் இருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இரண்டு ஆஸ்கர், மற்றும் பல விருதுகள், மற்றும் புகழுக்கு சொந்தக்காரர். வெளிநாட்டவரையும் தனது இசையின் மூலம் கட்டிப்போட்டவர். புகழின் உச்சிக்கு சென்றாலும் எந்த மமதையும் இல்லாமல், மேலும், மேலும் வளர்ந்துகொண்டிருப்பவர். அவ்வாறாகதான் நமக்கு அவரை தெரியும். ஆனால் இத்தனை பாராட்டுகள் அன்று இல்லை. ஆனால் அவரிடம் அதற்கான தெளிவும், நம்பிக்கையும் இருந்தது. ஏ.ஆர்.ரஹ்மான் வளர்ந்து வந்த காலகட்டம் அது. அந்த காலகட்டத்தில் இலங்கை வானொலியை சேர்ந்த அப்துல் ஹமீது அவர்கள் ஏ.ஆர்.ரஹ்மானை ஒரு நேர்காணல் செய்தார். அனேகமாக இதுதான் ரஹ்மானின் முதல் வீடியோ நேர்கானலாக இருக்கும். அதை பற்றிய ஒரு சிறு தொகுப்பு.

 

பள்ளிப்படிப்பை பாதியிலேயே விட்ட ஏ.ஆர்.ரஹ்மான் இன்றைய நவீன தொழில்நுட்பங்கள் வரை அனைத்தையும் கற்றுக்கொண்டு இன்னும் நவீனங்கள் வந்தாலும் கற்றுக்கொள்ள தயாராக இருப்பவர். இன்றும் எந்த புதிய தொழில்நுட்பங்கள் வந்தாலும் அதை உடனே கற்றுக்கொள்பவரும் அவரே. அப்படிப்பட்டவரிடம் இதுகுறித்து அன்றே அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்... "நான் ஸ்கூல்ல படிக்குறப்பவே எனக்கு கம்ப்யூட்டர், ஆம்பிளிஃபையர், அது சார்ந்த விஷயங்களுக்குதான் போகணும்னு ஆசைப்பட்டேன். ஆனா குடும்ப சூழ்நிலை காரணமா என்னால தொடர்ந்து படிக்க முடியல. அம்மா சொன்னாங்க உனக்குதான் மியூசிக் தெரியுமே அதுலயே சம்பாதிக்கலாம் அப்படினு. அப்போதான் கம்ப்யூட்டர்ஸ் வர ஆரம்பிச்சது. முன்னாடியே அதை பற்றிய தொடக்கம் இருந்ததால மேனுவல்ஸ் படிச்சு கொஞ்ச, கொஞ்சமா அறிவை வளத்துக்கிட்டேன்.”

 

a.r.rahman young

 

கிராமி விருதுகளில் தமிழ் பாடல்கள் விருது வெல்லும் காலம் எப்போது வரும் என கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் தமிழின் பெருமைகளை உலகறிய செய்யவேண்டும். என்ற ஆர்வம் அவருக்கு அன்றிலிருந்தே இருந்திருக்கிறது என்பதற்கு சான்றாக விளங்குகிறது. ”நம்ம தமிழ் பாடல்கள் வரணும். அது பத்தோட பதினொன்னா இருக்கக்கூடாது. அதான் முதல் இடத்துக்கு வரணும். அதுக்கு நான் இன்னைக்கு இருந்தே ஒர்க் பண்றேன்.”

 

அர்த்தமுள்ள பாடல்களைவிட அர்த்தமில்லாத பாடல்கள் அதிகளவு மக்களிடம் பிரபலமாவதற்கு என்ன காரணம் என்பதை அவர் அன்றே கூறியுள்ளார். ”நாம தினமும் ஒரே மாதிரி சாப்பிடும்போது, ஒரு நாள் மாத்தி சாப்பிட்டா அது நல்லா இருக்கும், புதுசா இருக்கும். ஆனா அதையே தொடர்ந்து சாப்பிட்டா அதுவும் அலுத்து போயிரும். அது மாதிரிதான் இதுவும். நான் மூன்று படங்களுக்கு ஒரு தடவைதான் இதுமாதிரி போடுறது, அது வித்தியாசமா, நல்லா இருக்கும். ஆனா இந்த மாதிரி பாடல்கள் ஆரோக்கியமானது இல்ல. சின்ன பசங்களாம் அதை புடுச்சுட்டே போயிறாங்க அதை நினைத்தால் கஷ்டமா இருக்கு.” சிறுவயதிலேயே அவருக்கிருந்த தெளிவு, முதிர்ச்சி, உழைப்புதான் அவரை இவ்வளவு உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது என்பதில் எவ்வித ஐயமுமில்லை.