Skip to main content

கர்நாடகாவில் திடீர் திருப்பம்; காங்கிரஸுக்கு லிங்காயத்து சமூகம் ஆதரவு - பின்னடைவில் பாஜக?

Published on 08/05/2023 | Edited on 08/05/2023

 

Lingayat community supports Congress party in Karnataka elections

 

கர்நாடகத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு லிங்காயத்து சமூகம் ஆதரவு தெரிவித்துள்ளது.

 

கர்நாடகாவில் மே 10 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆட்சியிலிருக்கும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தலுக்கு இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில், அங்கு இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி இன்று மாலையுடன் கர்நாடகாவில் அனைத்து கட்சி பிரச்சாரங்களும் நிறைவடைகிறது. 

 

கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டமன்றத் தொகுதிகள் உள்ள நிலையில், இழந்த ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸும் இருக்கும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளும் முனைப்பில் பாஜகவும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் முக்கிய வாக்குவங்கியாக இருக்கும் லிங்காயத்து சமூகத்தின் வீர சைவ லிங்காயத்துக்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும், லிங்காயத்து சமூக மக்கள் காங்கிரஸுக்கு வாக்களிக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் பல தொகுதிகளில் வெற்றியை தீர்மானிக்கக் கூடியவர்களாக லிங்காயத்து சமூகத்தினர்  இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதுவரை நடந்த தேர்தல்களில் லிங்காயத்து சமூகத்தின் வாக்குகள் பாஜகவிற்கே இருந்துள்ளது. கர்நாடகத்தின் முன்னாள் முதல்வரும் பாஜகவின் முக்கியத் தலைவருமான எடியூரப்பா லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்தவர். அதனால் லிங்காயத்து சமூக மக்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகள் பாஜக வசமே இருந்தது. 

 

இந்த நிலையில்தான் பாஜக தலைமைக்கும் எடியூரப்பாவிற்கும் உள்ள கருத்து வேறுபாடு, அதுமட்டுமில்லாமல் லிங்காயத்து சமூகத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் முதல்வருமான ஜெகதீஷ் ஷெட்டரும் பாஜகவிலிருந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்தது உள்ளிட்ட பல விசயங்கள் லிங்காயத்து சமூகத்தின் வாக்கு காங்கிரஸ் கட்சிக்கு திரும்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இது காங்கிரஸ் கட்சிக்கும் கூடுதல் பலத்தையும், பாஜவிற்கு பின்னடைவையும் கொடுக்கும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்