Skip to main content

பால்கனியில் விழுந்து காப்பாற்றப்பட்ட குழந்தையின் தாய் எடுத்த விபரீத முடிவு; விசாரணையில் பகீர் தகவல்!

Published on 20/05/2024 | Edited on 20/05/2024
The tragic decision taken by the mother of the child who was saved from falling from the balcony

சென்னை ஆவடி பகுதியில் வசித்து வந்தவர்கள் வெங்கடேசன்-ரம்யா தம்பதி. இந்தத் தம்பதிக்கு 7 மாத குழந்தை உள்ளது. இந்த நிலையில், கடந்த 28ஆம் தேதி காலை குழந்தையின் தாய் ரம்யா குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தார். 

அப்பொழுது கை தவறி குழந்தை நான்காவது மாடியில் இருந்து இரண்டாவது தளத்தில் உள்ள வெளிப்புற கூரை மீது விழுந்தது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் குழந்தையை எப்படியாவது மீட்டு விட வேண்டும் எனப் பல முயற்சிகளை மேற்கொண்டனர். கீழே பெட்ஷீட் போன்றவை விரிக்கப்பட்டு குழந்தை விழுந்தால் பிடிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து திக் திக் நொடிகளை கடந்து அந்தப் பகுதியைச் சேர்ந்த ஹரி என்ற இளைஞர் ஒருவர் சாதுர்யமாக செயல்பட்டு குழந்தையைப் பத்திரமாக மீட்டார். காப்பாற்றப்பட்ட குழந்தையானது உடனடியாக ஆவடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் தற்போது வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதனையடுத்து, வெங்கடேசன் ரம்யா தம்பதியினர் தனது சொந்த ஊரான கோவை மாவட்டத்துக்கு சில நாட்களாக குடும்பத்துடன் வசித்து வந்தனர். இந்த நிலையில், நேற்று (19-05-24) வீட்டில் தனியாக இருந்த ரம்யா, தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து, வெளியே சென்ற குடும்பத்தினர் வீட்டிற்கு வந்த போது, அங்கு ரம்யா தூக்கிட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து, அவர்கள் ரம்யாவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ரம்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சென்னையில் குழந்தை தவறி விழுந்த சம்பவத்திற்குப் பிறகு ரம்யாவை சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சனம் செய்து வந்ததாகவும், இதனால், மன அழுத்தத்தில் இருந்ததாகவும் தெரியவந்தது. தொடர் மன உளைச்சலுக்கு ஆளான ரம்யா தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்