Skip to main content

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்!

Published on 10/05/2024 | Edited on 10/05/2024
Interim bail for Delhi Chief Minister Arvind Kejriwal

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் இருந்து வருகிறார்.

இதனையடுத்து அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு எதிராக டெல்லி முதலமைச்சர் தொடர்ந்த வழக்கு கடந்த 7 ஆம் தேதி (07.05.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறைத் துறை சார்பில் ஆஜரான மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதிடுகையில், “கெஜ்ரிவால் தரப்பு வாதங்களை முன் வைக்க 3 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டால், அமலாக்கத்துறையும் தனது தரப்பு வாதங்களை முன் வைக்க அனுமதி தர வேண்டும். எனவே இன்றையே தினமே அமலாக்கத்துறை தரப்பு வாதங்களை முடித்துவிடுவோம் என்று உத்தரவாதம் கொடுக்க முடியாது. அனைத்து தரப்பினரும் சமம். கெஜ்ரிவால் அமலாக்கத்துறைக்கு ஒத்துழைப்பு கொடுத்திருந்தால் அவரை கைது செய்திருக்க மாட்டோம்” எனத் தெரிவித்திருந்தார். 

Interim bail for Delhi Chief Minister Arvind Kejriwal

மேலும் கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதிடுகையில், “நிபந்தனைகளின் அடிப்படையில் இடைக்கால ஜாமீன் வழங்கப்படுவது வழக்கம் தான். கெஜ்ரிவால் தரப்பில் இரண்டு நாட்கள் மட்டுமே வாதிடப்பட்டது. ஆனால் துஷார் மேத்தா, கெஜ்ரிவால் தரப்பில் மூன்று நாட்கள் வாதிட்டதாக தெரிவித்தார். இதன் மூலம் தவறான கருத்தை உருவாக்க துஷார் மேத்தா முயற்சி செய்கிறார். மேலும் முதல்வரின் கையெழுத்து இல்லை எனக் கூறி டெல்லி துணை நிலை ஆளுநர், அரசின் கோப்புகளை திருப்பி அனுப்பி விட்டார்” எனவும் வாதிட்டார்.

அதனைத் தொடர்ந்து நீதிபதி சஞ்சீவ் கண்ணா, “தேர்தலுக்கு முன்பாக கைது செய்யப்பட்டுள்ளதாக வாதிடுவதற்கு கெஜ்ரிவால் தரப்புக்கு உரிமை உள்ளது. அதே சமயம் இடைக்கால ஜாமினில் கெஜ்ரிவாலை விடுவித்தால் அதிகாரப்பூர்வ பணிகளை மேற்கொள்ளக் கூடாது.  பதவியிலிருக்கும் முதலமைச்சர் என்பதால் அவருக்கு எந்தத் தடையும் விதிக்க முடியாது” எனத் தெரிவித்தார். மற்றொரு நீதிபதி தத்தா, “தேர்தல் நடக்காமல் இருந்திருந்தால் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் என்ற கேள்வியே எழுந்திருக்காது” எனத் தெரிவித்தார். இதனையடுத்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது. 

Interim bail for Delhi Chief Minister Arvind Kejriwal

இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் இன்று (10.05.2024) விசாராணைக்கு வந்தது. அப்போது “ஜூன் 4 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும்” என்று அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங் வாதிட்டார். இந்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. இருப்பினும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1 வரை மட்டுமே இடைக்கால ஜாமீன் வழங்குவதற்கான உத்தரவை பிறப்பிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதே சமயம் ஜூன் 2 ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் சரணடைய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. முதலமைச்சராக அலுவல் பணிகளில் ஈடுபடக் கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாகவும்  தகவல் வெளியாகியுள்ளது.

சார்ந்த செய்திகள்