ADVERTISEMENT

பெண்குழந்தையின் பிறப்புறுப்பை தொட மதம் அனுமதிப்பது ஏன்?

06:34 PM Jul 10, 2018 | vasanthbalakrishnan

இஸ்லாமிய நடவடிக்கைகளான முத்தலாக், ஹலாலா, பலதாரமணம் ஆகியவை குறித்து உச்சநீதிமன்ற விசாரணையில் உள்ள நிலையில், இப்போது, பெண்குழந்தைகளின் பெண்உறுப்பு அறுவைச் சிகிச்சையும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இஸ்லாம் மார்க்கத்தில் ஒரு பெண்ணை விவாகரத்து செய்ய மூன்று முறை தலாக் சொன்னால் போதும் என்ற நடைமுறை இருக்கிறது. குறிப்பிட்ட இடைவெளியில் தலாக் சொல்ல வேண்டும் என்று உள்ள விதியை மாற்றி, ஒரே நேரத்தில் முத்தலாக் சொல்லி விவாகரத்து கொடுக்கும் வழக்கம் இருப்பதாகவும் அதற்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஆண்களை பெண்கள் விவாகரத்து செய்வதற்கு உரிய நிக்காஹ் ஹலாலா என்ற நடைமுறையையும், பாலிகாமி என்ற பலதார மண நடைமுறையையும் வினா எழுப்பி உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

ADVERTISEMENT



இஸ்லாம் மார்க்கத்தில் இஸ்லாமியர்கள் காலங்காலமாக அனுபவித்து வந்த நடைமுறை பழக்க வழக்கங்களில் மனித உரிமை, பெண்ணுரிமை என்ற பேரில் பாஜக அரசு பலமுனைத் தாக்குதல்களை நடத்துவதாக இஸ்லாமிய அமைப்புகள் குற்றம் சாட்டிவரும் நிலையில், இப்போது புதிதாக ஒரு பிரச்சனை பூதாகரமாகி இருக்கிறது. இஸ்லாம் மார்க்கத்தில் ஆண் குழந்தைக்கு சுன்னத் எனும் சிறு ஆபரேசன் செய்யப்படுவது வழக்கம். ஆணுறுப்பின் முன்தோலை வெட்டி நீக்குவதைத்தான் இப்படி சொல்வார்கள். இப்படிச் செய்வதன் மூலம் கிருமித் தொற்று தவிர்க்கப்படும் என்றும், எய்ட்ஸ் தடுக்கப்படும் என்றும் மருத்துவரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT


ஆனால், பெண் குழந்தைகளுக்கும் இதேபோன்று பெண்ணுறுப்பில் கிளிட்டோரியஸ் எனப்படும் பகுதியை வெட்டி எடுக்கும் பழக்கம் நடைமுறையில் இருக்கிறது. இதற்கு கட்னா, காஃப்த் என்று பெயர். இதுவும்கூட பெண்ணுறுப்பு சுத்தத்திற்காகவே செய்யப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால், பெண்குழந்தைகளின் பெண்உறுப்புகளை சிதைப்பதை எதிர்த்து சுனிதா திவாரி என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் இந்திரா ஜெய்சிங்கும், மனுவை எதிர்த்து மத சுதந்திரத்திற்கான பெண்கள் அமைப்பின் சார்பில் அபிசேக் சிங்வியும் வாதாடினார்கள்.



சிங்வி தனது வாதத்தில், இஸ்லாமிய பெண்குழந்தைகளின் பெண் உறுப்பில் உள்ள மிகச்சிறிய பகுதியை வெட்டி எடுக்கும் வழக்கம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடைமுறையில் இருக்கிறது. இதை அரசியல் சட்டம் அனுமதிக்கிறது என்றார். மனுவை எதிர்த்து வாதாடிய மத்திய அரசு வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், ஆண்குழந்தைகளுக்கு செய்யப்படும் சுன்னத் எனப்படும் அறுவைச் சிகிச்சை எய்ட்ஸ் கிருமி தாக்குதலில் இருந்த பாதுகாப்பு அளிப்பதாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், பெண்குழந்தைகளுக்கு செய்யப்படும் அறுவைச் சிகிச்சை ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துகிறது. எனவேதான், அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஆப்பிரிக்காவில் உள்ள 27 நாடுகளில் இந்தப் பழக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மத அடிப்படையிலான சுதந்திரமும் உரிமையும்கூட பொது சுகாதாரம், தார்மீக ஒழுக்கம் ஆகியவற்றுக்கு கட்டுப்பட்டதுதான் என்றார்.


வாதங்களைக் கேட்ட நீதிமன்றம், பெண்ணின் உடலோடு ஒட்டிய பகுதியை மத நடவடிக்கை என்ற பேரில் ஏன் வெட்டி எடுக்க வேண்டும், இத்தகைய நடவடிக்கைகள் பெண்குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் குற்றங்களை தடுக்கும் போக்ஸா சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்தது. மேலும் தாவூதி போராஹ் வகுப்பினர் மத்தியில் இருந்த இதுபோன்ற பழக்கம் ஏற்கெனவே குற்றம் என்று தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, ஜூலை 16 ஆம் தேதிக்குள் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை, சுகாதாரத்துறை, சமூகநீதித்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புத்துறை ஆகிய நான்கு அமைச்சகங்களும், மஹாராஸ்டிரா, குஜராத், ராஜஸ்தான், டெல்லி ஆகிய நான்கு மாநில அரசுகளும் பதில் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT