ADVERTISEMENT

3 கோடி வேலை எங்கே...? அதிர்ச்சி தரும் சர்வே தகவல்கள்

01:26 PM Oct 08, 2018 | tarivazhagan

2014-ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் வாக்குறுதியில் 2 கோடி வேலை வாய்ப்புகள் வருடந்தோறும் உருவாக்கப்படும் என்று உறுதியளித்து இருந்தது பா.ஜ.க. ஆனால், நடைமுறையில் அது நிறைவேற்றபடவில்லை என்பதை பல புள்ளிவிவரங்களும், சர்வே முடிவுகளும் தொடர்ந்து தெரிவித்து வருகின்றன. அதை உறுதிபடுத்தும் விதமாக சமீபத்தில் வேலைவாய்ப்பு தொடர்பான புள்ளிவிவரங்களை வெளியிட்ட அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் சர்வே உள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT


இந்திய நாட்டின் பொருளாதாரம் அதிகரித்துவரும் அளவுக்கு, வேலைவாய்ப்பு அதிகரிக்கவில்லை. தற்போது உள்ள நிலையில் 92 சதவீத பெண்கள் மற்றும் ஆண்களில் 82 சதவீதம் பேர் மாதத்திற்கு ரூ.10,000–க்கும் குறைவான வருமானம் பெற்று வருகின்றனர். இந்தியாவில் 67 சதவீத குடும்பங்கள் 10,000 ரூபாய்க்கும் குறைவான வருமானமே பெறுகின்றனர். இது ஏழாவது மத்திய ஊதிய குழு பரிந்துரை செய்த குறைந்தபட்ச ஊதியமான ரூ. 18,000-ஐ விட குறைவானது என்பது போன்ற முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது சர்வே.

1970–களில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 3 சதவீதத்திலிருந்து 4 சதவீதம் வரை இருந்தது. அந்தக் காலகட்டங்களில் வேலைவாய்ப்பு வளர்ச்சி விகிதம் 2 சதவீதமாக இருந்தது. அதாவது நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும், வேலைவாய்ப்பு வளர்ச்சியிலும் பிரதிபலித்தது. ஆனால் இன்று உள்நாட்டு உற்பத்தி 10% உயர்ந்த போதிலும், வேலைவாய்ப்பு வளர்ச்சி 1% மட்டுமே உயர்ந்துள்ளதாக சர்வே முடிவுகள் எடுத்துகாட்டுகின்றன. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்பு வளர்ச்சிக்குமான இடைவெளி அதிகரித்துவருகின்றன.

இந்தியாவில் இன்று பூதாகரமாக மாறிவரும் மற்றொரு பிரச்சனை தகுதி குறைந்த வேலை மற்றும் குறைந்த ஊதியம். பெரும்பாலான மக்கள் தங்ளுடைய தகுதிக்கும் குறைவான வேலைகளை செய்துவருகின்றனர். மேலும் உழைப்புக்கான சரியான ஊதியமும் பல தொழிலாளர்களுக்கு கிடைப்பதில்லை என்பதையும் சர்வே முடிவுகள் வெளிபடுத்தியுள்ளன.



உயர்கல்வி படித்த இளைஞர்களின் வேலையின்மை 16 சதவீதமாக உள்ளது. பட்டப்படிப்பு படித்தவர்களின் வேலையின்மை 16.3% மற்றும் முதுகலை பட்டதாரிகளின் வேலையின்மை விகிதம் 14.2% ஆக உள்ளது. மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது வட இந்திய மாநிலங்களில் வேலையின்மை விகிதம் கடுமையாக உள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித வளர்ச்சி அறிக்கை (UNHDR) தற்போது நடத்திய சர்வே முடிவுகளின் படி, இந்தியாவில் 78 சதவீதம் பேர், அவர்களுக்குத் தகுந்த வேலையில் இல்லை. அதாவது 10–இல் 8 பேர் நல்ல வேலையில் இல்லை என்ற அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளது. இது உலகின் சராசரியான 43%-ஐ விட மிக அதிகம். இந்த சதவீதம் சீனாவில் 33% ஆக உள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் சராசரியாக 17 மில்லியன் பேர் தொழில் அல்லது வேலைவாய்ப்பு நோக்கி நகர்கின்றனர். ஆனால், அதில் 5.5 மில்லியன் பேருக்கு மட்டுமே தொழில் அல்லது வேலைவாய்ப்பு அமைகிறது.

டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா, ஸ்கில் இந்தியா, ஸ்மார்ட் சிட்டி மற்றும் ஸ்டேன்ட் அப் இந்தியா போன்ற பல திட்டங்களை அறிவித்து நடைமுறைபடுத்தியது மத்திய அரசு. ஆனால், இந்த திட்டங்கள் மக்களின் வேலைவாய்ப்புக்கான தேவைகளை பூர்த்தி செய்யவில்லை என்பதை சர்வே தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. போன்ற நடைவடிக்கைகள் புதிய வேலைவாய்ப்பை உருவாக்குவதில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளன.

134 கோடி மக்கள் தொகை உள்ள இந்தியா போன்ற மிகப்பெரிய நாட்டில் அனைத்து மக்களுக்கும் நல்ல வேலைவாய்ப்பு அளிப்பது கடினமான ஒன்றுதான். ஆனால் இன்றும் 3 கோடி மக்கள் வேலை தேடி கொண்டிருக்க காரணம் ஆளும் மற்றும் ஆண்ட கட்சிகளின் தவறான கொள்கை முடிவுகள். 2019-ஆம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் இந்த வேலைவாய்ப்பு பிரச்சனை பெரிய அளவு இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT