ADVERTISEMENT

அபிநந்தன் எப்படி நடத்தப்படவேண்டும்? ஜெனிவா ஒப்பந்தம் சொல்வது இதுதான்

01:18 PM Feb 28, 2019 | santhoshkumar


புல்வாமா தாக்குதலுக்கு பதில் தாக்குதலாக இந்தியா 26-02-2019 அன்று பால்கோட் பகுதியில் தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாம்களை அழித்தது. அதனைத் தொடர்ந்து 26ஆம் தேதி மாலை மற்றும் இரவு நேரத்தில் பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தியது இந்தியா. இந்நிலையில் 27ஆம் தேதி காலை இந்திய பாகிஸ்தான் எல்லை பகுதியில் பரபரப்பு நிலவியது. இந்திய எல்லைக்குள் இரண்டு பாகிஸ்தான் விமானங்கள் உள்ளே நுழைய முயற்சி செய்ததாகவும், பின்னர் இந்திய ராணுவ நடவடிக்கையால் அவை திரும்பச் சென்றதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையில் இந்திய வான்படையை சேர்ந்த எம்.ஐ 17 ரக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி அதில் இரண்டு இந்திய வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

ADVERTISEMENT

இந்தத் தாக்குதலில் இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டார். பின்னர், அபிநந்தன் திரும்ப வராததை இந்திய அரசும் உறுதிப்படுத்தியது. மேலும் பாகிஸ்தானில் அவர் சிக்கிய இடத்தில் ஒரு குழுவினர் அவரை அடித்து இழுத்துச் செல்வது போன்ற வீடியோவும் பாகிஸ்தான் ஊடகங்களில் வெளியிடப்பட்டது. பின்னர், அந்த குழுவினரிடம் இருந்து பாகிஸ்தான் ராணுவத்தால் மீட்கப்பட்டு, அபிநந்தன் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை இறுதியாக அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் விசாரிப்பது போன்ற வீடியோ வெளியானது. அதில் அபிநந்தன் "பாகிஸ்தான் ராணுவத்தினர் என்னை கௌரவமாக நடத்துகின்றனர்" என்று தெரிவித்தார். ஆனால் இந்திய வெளியுறவுத் துறை தரப்பில் பாகிஸ்தான் இந்த வீடியோவை வெளியிட்டு, ஜெனிவா ஒப்பந்தத்தை மீறியிருக்கிறது என கண்டனம் தெரிவித்தது. இன்னொரு புறம் இரண்டு நாடுகளிலும் ட்விட்டரில் ‘சே நோ டு வார்’ #saynotowar என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டானது. இது மட்டுமல்லாமல் ஜெனிவா ஒப்பந்தத்தின்படி பிடிபட்ட அபிநந்தன் விரைவில் இந்திய அரசிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் சமூக வலைதளத்தில் தெரிவித்து வந்தனர்.

இரு நாடுகளுக்கு இடையேயான ஆயுதப்போரின்போது, ஒரு நாட்டின் ராணுவ வீரர் எதிரி நாட்டிடம் அவர்களது எல்லைக்குள் சிக்கிக்கொள்ளும்போது அவர் போர் கைதி என அறிவிக்கபப்டுவார். இரு நாடுகளுக்கு இடையேயான போர் மற்றும் போர் கைதிகளை கையாளும் விதிமுறைகள் குறித்தும் இந்த ஜெனிவா ஒப்பந்தம் பேசுகிறது.

ADVERTISEMENT


ஜெனிவா ஒப்பந்தம்

1864ஆம் ஆண்டுதான் முதல் ஜெனிவா ஒப்பந்தம் பிரகடனப்படுத்தப்பட்டது. அது, காயம்பட்ட ராணுவ வீரர்களை எப்படி நடத்தப்பட வேண்டுமென நெறிமுறைகளை வழங்கியுள்ளது. 1846ஆம் ஆண்டு முதல் ஜெனிவா ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டு பின்னர் 1906, 1929,1949 ஆகிய ஆண்டுகளில் மேம்படுத்தப்பட்டது.

இரண்டாவது ஜெனிவா ஒப்பந்தம் கடலில் போர் செய்வோர் மற்றும் போரில் காயம்பட்ட வீரர்கள் குறித்து பேசுகிறது.

மூன்றாவது ஜெனிவா ஒப்பந்தத்தில், போர் கைதிகளை எப்படி நடத்த வேண்டும் என்பது குறித்து வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. இது 1929ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு, 1949ஆம் ஆண்டு அவை அனைத்தும் மேம்படுத்தப்பட்டன. நான்காம் ஜெனிவா ஒப்பந்தம் 1949ஆம் ஆணடில் வந்தது. அதில் போரின்போது மக்கள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. பின்னர், 1977 ஆண்டு புரோட்டோக்கால் ஒன்று, இரண்டு என இரண்டாகப் பிரித்து நெறிமுறைகள் சேர்க்கப்பட்டன. 2005ஆம் ஆண்டு மூன்றாவது புரோட்டாக்கால் உருவாக்கப்பட்டு நெறிமுறை சேர்க்கப்பட்டது.

ஜெனிவா ஒப்பந்தத்தின்படி ஒரு போர் கைதி எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்கிற அடிப்படை கோட்பாடுகள் இவைதான்...

கைது செய்யப்பட்ட வீரர்களை போரில் ஈடுபடாமல் தடுத்து நிறுத்துவதே நோக்கமாக இருக்க வேண்டுமே தவிர, அவர்களை துன்புறுத்தக் கூடாது.

போர் முடிந்த உடனேயே கைது செய்யப்பட்ட போர் கைதிகளை விடுவிக்க வேண்டும்.

கைது செய்யப்பட்டு வைத்திருக்கும் சிறையில் அவர்களை மனித நேயத்துடன் நடத்தப்பட வேண்டும்.

போர் கைதிகளிடம் வன்முறையை கையாளக் கூடாது மற்றும் அவர்களை தரக்குறைவாக நடத்த கூடாது.

சிறையில் அவர்களுக்கு அடிப்படை தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் மற்றும் சுகாதாரம் ஆகியவை உறுதி செய்யப்பட வேண்டும்.

கைது செய்யப்பட்ட எதிரி நாட்டு வீரர்கள், கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்தால் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். பதிலுக்காக அவர்களை அச்சுறுத்தவோ, மோசமாக நடத்தவோ கூடாது.

போர்க்குற்றம் நடந்திருக்கும் வாய்ப்பிருந்தால், அதற்காக போர்க்கைதிகளிடம் கைது செய்து வைத்திருக்கும் நாடு விசாரணை நடத்தலாம். ஆனால், சர்வதேச மனிதாபிமான சட்டங்களின்படி, போரில் நடந்த வன்முறை குறித்து விசாரணை செய்யக்கூடாது.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT