ADVERTISEMENT

20 நாளில் 300 சதவீதம் லாபம் கொடுத்த வோடபோன் ஐடியா பங்குகள்! முதலீட்டாளர்கள் காட்டில் அடைமழை!!

08:10 AM Jun 09, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

இந்திய டெலிகாம் துறைகளில் முதலீடு செய்ய பன்னாட்டு நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய தொலைதொடர்பு நிறுவனங்களின் பங்குகள் மளமளவென உயர்ந்துள்ளன. குறிப்பாக, கடந்த இருபதே நாள்களில் வோடபோன் ஐடியா பங்குகளின் மதிப்பு 300 சதவீதம் வரை வளர்ச்சி கண்டுள்ளது.

ADVERTISEMENT


முகேஷ் அம்பானியன் ரிலையன்ஸ் ஜியோ (ஆர்ஜியோ) நிறுவனத்தில் பேஸ்புக் நிறுவனம் கணிசமான முதலீடுகளைச் செய்துள்ளது. மேலும், ஆர்ஜியோ நிறுவனம் சில்வர் லேக், விஸ்டா ஈக்விட்டி, ஜெனரல் அட்லாண்டிக் ஆகிய நிறுவனங்களிடமும் கணிசமாகப் பங்குகளைக் கைமாற்றிவிட்டு 75 ஆயிரம் கோடிகளைத் திரட்டி விட்டார் முகேஷ் அம்பானி.

இந்தியாவில், தொலைத்தொடர்பு துறையில் ஆர்ஜியோ வருகைக்குப் பிறகு ஏனைய சிறு நிறுவனங்கள் பலத்த அடி வாங்கின. இந்த வர்த்தகப் போட்டியில் பார்தி ஏர்டெல் இரண்டாம் இடத்திலும், அதற்கு அடுத்த இடத்தில் வோடபோன் ஐடியா நிறுவனமும் களத்தில் நிற்கின்றன. இந்நிலையில், பாரதி ஏர்டெல் நிறுவனத்தில் அமேசான் நிறுவனம் முதலீடு செய்யப்போவதாகத் தகவல்கள் வெளியானதால், அந்நிறுவனத்தின் பங்குகளும் கடந்த வாரத்தில் கிடுகிடுவென உயர்ந்தன. திங்களன்று பார்தி ஏர்டெல் பங்குகள் அதிகபட்சமாக 593 ரூபாய் வரை சென்று, இறுதியில் 583- இல் நிறைவடைந்தது.

ஆர்ஜியோவுக்கு பேஸ்புக், பார்தி ஏர்டெல் நிறுவனத்திற்கு அமேசான் என பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீது கண் வைக்க, கூகுள் நிறுவனம் நாட்டின் மூன்றாவது பெரிய டெலிகாம் நிறுவனமான வோடபோன் ஐடியாவிடம் இருந்து 5 சதவீத பங்குகளை வாங்க இருப்பதாக கடந்த மே இறுதியில் தகவல்கள் கசிந்தன. இப்போது வரை அந்தத் தகவலை கூகுள் நிறுவனமோ, வோடபோன் ஐடியா நிறுவனமோ ஆணித்தரமாக மறுக்கவில்லை என்பதால் முதலீட்டாளர்கள் போட்டிப்போட்டுக் கொண்டு வோடபோன் ஐடியாவில் முதலீடுகளைக் கொட்டி வருகின்றனர்.

இதனால் கடந்த 20 வேலை நாள்களில் மட்டும் இந்நிறுவனப் பங்குகள் 50 சதவீதம் அல்ல... 100 சதவீதம் அல்ல... கிட்டத்தட்ட 300 சதவீதம் வரை தடாலடியாக உயர்ந்து இருக்கின்றன.


கடந்த வெள்ளியன்று (ஜூன் 5) வோடபோன் ஐடியா நிறுவன பங்குகள் 10.50ல் முடிவடைந்தன. இரண்டு நாள் விடுமுறைக்குப் பிறகு திங்களன்று சந்தை திறந்தவுடனேயே நிப்டியில் இப்பங்கின் விலை 11.55 ஆக என்ற நிலையில் வர்த்தகம் துவங்கியது. அதிகபட்சமாக 12.60 ரூபாய் வரை உயர்ந்து, இறுதியில் 12 ரூபாயில் முடிவடைந்தது.

கடந்த மே 11- ஆம் தேதி, வோடபோன் ஐடியா நிறுவனப் பங்குகள் விலை 4.20 ரூபாயாக இருந்தது. அடுத்த ஒரு வாரம் இப்பங்குகள் 20 பைசா, 30 பைசா என மெதுவாக உயர்ந்து வந்த நிலையில்தான், அதாவது மே 28- ஆம் தேதியன்று, இந்நிறுவனத்தில் கூகுள் நிறுவனம் முதலீடு செய்ய இருப்பதாகத் தகவல்கள் கிளம்பின. ஏற்கனவே பேஸ்புக் நிறுவனம் ஆர்ஜியோவில் முதலீடு செய்வதாகத் தகவல் பரவிய அடுத்தடுத்த சில நாள்களிலேயே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பங்குகள் மளமளவென எகிறின.

அந்த அனுபவம்தான் முதலீட்டாளர்களிடையே வோடபோன் ஐடியா பங்குகளின் மீதும் பார்வையைக் குவித்திருக்கிறது. முதலீட்டாளர்கள் போட்டிப்போட்டு இப்பங்குகளை வாங்கி வருவதால் 20 வேலை நாள்களில், மே 11- ஆம் தேதி நிலவரத்துடன் (4.20) ஒப்பிடுகையில், தற்போது 300 சதவீதம் வரை (12.60) வரை உயர்ந்திருக்கிறது. இது, முதலீட்டாளர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க, இண்டஸ் டவர்ஸ் என்ற செல்போன் கோபுரம் கட்டுமான நிறுவனத்துடன் வோடபோன் ஐடியா வரும் 11- ஆம் தேதி புதிய வர்த்தக உடன்படிக்கை செய்து கொள்ள இருப்பதும், இப்பங்குகளின் விலையேற்றத்துக்கு இன்னொரு முக்கியக் காரணம் என்கிறார்கள். ஓராண்டுக்கு முன்னதாகக் கடும் சரிவைச் சந்தித்த இந்நிறுவனம், மூடப்படலாம் என்ற தகவல்களும் வேகமாகப் பரவின. ஆனால் ஓரே ஆண்டில் மீண்டும் பங்குகளின் விலையேறியதை அடுத்து, இதன் சந்தை மதிப்பும் கூடியுள்ளது.


கடந்த மே 29- ஆம் தேதி, அதிகபட்சமாக வோடபோன் ஐடியா பங்குகள் ஒரே நாளில் 34 சதவீதம் வரை உயர்ந்தது. திங்களன்று இப்பங்குகள் 14.29 சதவீதம் வளர்ச்சி கண்டிருந்தன. கடந்த 52 வாரங்களில் இப்பங்குகள் அதிகபட்சமாக 14 ரூபாயாக உயர்ந்துள்ளது. குறைந்தபட்சமாக 2.40க்கு விற்றுள்ளன. இன்று (ஜூன் 9) கடந்த 52 வாரத்தில் அதிகபட்ச விலையைக் கடக்கும் என்பதோடு, கடந்த ஓராண்டில் இல்லாத புதிய உச்சத்தை எட்டும் என்ற எதிர்பார்ப்பும் முதலீட்டாளர்களிடம் நிலவுகிறது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT