/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vi3232.jpg)
திணறடிக்கும் கடன் சுமையால் திண்டாடிவரும் வோடாஃபோன் - ஐடியா நிறுவனம், திவாலாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என அந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 27 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்ட இந்த நிறுவனம் திவாலானால் 10,000க்கும் மேற்பட்டோர் வேலை இழப்பர் என்பதும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான வோடாஃபோன் - ஐடியா, திவாலாகும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதற்கு காரணம் தெரியவந்திருக்கிறது. 1.8 லட்சம் கோடி ரூபாய் கடன் இருப்பதும், தற்போது அதை அடைக்க போதிய வருமானம் இல்லை என்பதும் அந்நிறுவன உரிமையாளர்களின் நிலைப்பாடு. இந்த நிறுவனத்தில் 26% உரிமையாளராக உள்ள குமாரமங்கலம் பிர்லா, தனது பங்குகளை இலவசமாக அரசு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்குத் தருவதாவும், அரசே வோடாஃபோன் - ஐடியா நிறுவனத்தை எடுத்து நடத்த வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
இதேபோல் 45% உரிமையை வைத்திருக்கும் பிரிட்டனின் வோடாஃபோன் நிறுவனம் தனது பங்குகளையும் இலவசமாக கொடுக்கத் தயாராக இருப்பதாக வங்கிகளுக்குத் தெரிவித்துள்ளது. வோடாஃபோன் - ஐடியா நிறுவனத்திடம் தற்போது 350 கோடி ரூபாய் மட்டுமே கையிருப்பில் உள்ளதாகவும், நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்த முடியாத நிலையில் உரிமையாளர்கள் இருப்பதாகவும் அரசுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வோடாஃபோன் - ஐடியா நிறுவனம் மத்திய அரசுக்கு மட்டுமே ரூபாய் 1.50 லட்சம் கோடிக்கு மேல் செலுத்த வேண்டியுள்ளது.
வங்கிகளிடமிருந்து பெறப்பட்டுள்ள ரூபாய் 23,000 கோடி கடனுக்கான வட்டியையோ, அசலையோ திரும்பச் செலுத்தும் வழி தெரியாமல் அந்நிறுவனம் திணறிக்கொண்டிருக்கிறது. வோடாஃபோன் - ஐடியா நிறுவனத்தின் ஒரு பங்கு வெறும் 6 ரூபாய்க்கு வணிகம் ஆகும் நிலை உருவாகியுள்ளது. இந்நிறுவனத்துக்கு கடன் வழங்க வங்கிகள் தயங்குவதால், வோடாஃபோன் - ஐடியா நிறுவனம் திவாலாகுமா, அதை மீட்க அரசு தலையிடுமா என்பதே இப்போதைய கேள்வியாக உள்ளது.
ஒரு காலகட்டத்தில் இந்தியாவில் 14 டெலிகாம் சேவை நிறுவனங்கள் இருந்தன. கடும் போட்டி காரணமாக ஜியோ, ஏர்டெல் ஆகிய இரண்டு தனியார் டெலிகாம் நிறுவனங்கள், அரசு தரப்பில் பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் என டெலிகாம் துறை தற்போது சுருங்கிவருகிறது. வோடாஃபோன் - ஐடியா நிறுவனத்தின் டெலிகாம் சேவையை இந்திய டெலிகாம் வாடிக்கையாளர்களில் 23% பேர் பயன்படுத்திவரும் நிலையில், இந்நிறுவனம் திவாலானால், இவர்களின் செல்ஃபோன் மற்றும் இன்டர்நெட் சேவைகள் பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)