ADVERTISEMENT

கல்விப் புரட்சிக்கு வித்திட்ட விருதுநகர் மாவட்டம்! பிளஸ்-2 தேர்வு தேர்ச்சி சதவீதத்தில் முதலிடம்!

05:25 PM May 08, 2023 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளன. பிளஸ்-2 தேர்வில் தொடர்ந்து மாநில அளவில் முதலிடம் பிடித்து வரும் விருதுநகர் மாவட்டம், இந்த ஆண்டும் தேர்ச்சி விகிதத்தில் (97.85%) முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது. இதிலொரு ஒற்றுமை என்னவென்றால், கடந்த 2017 ஆம் ஆண்டிலும் விருதுநகர் மாவட்டம் பெற்ற தேர்ச்சி விகிதம் இதே 97.85 சதவீதம்தான். பிளஸ் 2 தேர்வு தேர்ச்சி விகிதத்தில், 1985லிருந்து 2013 வரை தமிழகத்தில் தொடர்ந்து 28 ஆண்டுகள் முதலிடத்தைப் பிடித்து வந்த விருதுநகர் மாவட்டம், 2014 மற்றும் 2016ல் 3வது இடத்துக்குத் தள்ளப்பட்டது. 2015 மற்றும் 2017ல் விருதுநகர் மாவட்டம் மீண்டும் முதலிடத்துக்கு வந்தது. நடப்பு கல்வியாண்டிலும் (2023) முதலிடம் பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் பிளஸ்-1 பாடமே நடத்தாமல், இரண்டு கல்வியாண்டிலும் பிளஸ்-2 பாடம் மட்டுமே நடத்திவிட்டு +2 தேர்ச்சி விகிதத்தில் அதிகரித்து காட்டிய பள்ளிகளால், விருதுநகர் மாவட்டம் முதலிடத்தைப் பறிகொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது, அந்தக் குறைபாடுகளெல்லாம் சரி செய்யப்பட்டுவிட்டன என இக்கல்வி மாவட்டம் கடந்தகால கசப்புகளை அசைபோடுகிறது. விருதுநகர் மாவட்ட கல்வித்துறையின் தொடர் வழிகாட்டுதலில் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிறப்பு பயிற்சி வகுப்புகளை அர்ப்பணிப்பு உணர்வுடன் நடத்தியதும், அதற்கு பெற்றோர் தரப்பில் முழு ஒத்துழைப்பு அளித்து வந்ததும், மாணவர்களின் ஆர்வமும் உழைப்புமே இந்த வெற்றியைப் பெற்றுத் தந்திருக்கிறது. ஆனாலும், இந்தத் தொடர் வெற்றிக்கு அழுத்தமான ஒரு பின்னணி உண்டு.

விருதுநகர் அப்போது விருதுபட்டியாக இருந்தது. ஏதேனும் அவசரத் தகவலைத் தாங்கிய தந்தி வீடுகளுக்கு வரும். தந்தியில் உள்ள வாசகங்களை விருதுபட்டி மக்களுக்கு படிக்கத் தெரியாது. தந்தியை டெலிவரி செய்பவர் படித்து விபரங்களைக் கூறுவார் என்று எதிர்பார்க்க முடியாது. அந்தத் தந்தியை பெற்றுக்கொள்பவர், விருதுபட்டியில் படித்த பிராமணர் வீட்டை நோக்கி ஓடுவார். பார்த்தாலே தீட்டு என்றிருந்த காலம் என்பதால் பயத்தால் நடுங்கியபடியே, பிராமணர் வீட்டு வாசலில் நிற்பார். ‘சாமீ’ என்றெல்லாம் குரலெழுப்ப முடியாது. அந்த வீட்டிலிருந்து யாராவது வெளியே வரும்வரை காத்திருக்க வேண்டும். அப்படி வருபவரது பக்கவாட்டில், உடம்பை வளைத்துப் பணிவு காட்டி நின்று, பவ்யமாக தந்தியை நீட்ட வேண்டும். அவர் படித்துப் பார்த்துவிட்டு, ‘சாவுத் தந்திடா’ என்று இறந்தவர் பெயரையும் ஊர் விபரத்தையும் கூறுவார். அந்த இடத்திலேயே ‘போயிட்டியா.. எங்கள விட்டுட்டுப் போயிட்டியா..’ என்று தலையில் அடித்துக்கொண்டு அழுவார் தந்தியைக் கொண்டு வந்தவர். அந்த பிராமணரோ ‘என் வீட்டு முன்னால எதுக்குடா ஒப்பாரி வைக்கிற? உன் வீட்டுல போயி அழு’ என்று விரட்டியடிப்பார். அந்தக் காலகட்டத்தில் விருதுநகர் மாவட்டம் முழுவதுமே இதே நிலைதான்.

தந்தி மூலம் வரும் ஒரு துக்க விஷயத்தைக்கூட தெரிந்துகொள்ள முடியாதவர்களாக இருக்கிறோமே என்ற ஆதங்கம் வெளிப்பட்டபோதெல்லாம் கல்வியின் அவசியத்தை விருதுநகர் மக்கள் உணர்ந்தனர். ஒவ்வொரு நாளும் வீட்டுக்கு வீடு ஒரு பிடி அரிசியைக் கலயங்களில் சேகரித்தனர். அந்தப் பிடி அரிசி வீடுதோறும் வசூலிக்கப்பட்டது. அந்த அரிசி விற்று கிடைத்த தொகையில், 1888-இல் சத்திரிய வித்யாசாலா என்ற பள்ளியை விருதுநகரில் தொடங்கினார்கள். ‘வியாபாரிகள் மகமை’ என்ற பெயரிலும் குறிப்பிட்ட ஒரு தொகையை சங்கத்தில் சேர்த்து, அந்த நிதியைக் கல்விக்குப் பயன்படுத்தினார்கள். வியாபாரிகளும் ‘மகமை’ என்ற பெயரில் குறிப்பிட்ட ஒரு தொகையை சங்கத்துக்கு கொடுத்தனர். அந்த நிதியையும் கல்விக்கே பயன்படுத்தினார்கள்.

தமிழகத்தில் கல்விக்கண் திறந்தவர் என்று போற்றப்படும் காமராஜர் படித்தது இந்த விருதுநகர் பள்ளியில்தான். தமிழகத்தின் முதலமைச்சராக காமராஜர் இருந்தபோது ‘எங்க ஊருல கோயில் கட்டப்போறோம். அவசியம் நீங்க வரணும்..’ என்று அவரிடம் தகவல் கூறி அழைப்பார்கள். அவர்களிடம் ‘கோவில் எதுக்குண்ணே? மொதல்ல பள்ளிக்கூடம் கட்டு’ என்பார். நகரம், கிராமம் என்ற பாரபட்சமின்றி தமிழ்நாட்டில் பள்ளிகளை நிறுவச்செய்து, கல்விப் புரட்சிக்கு வித்திட்ட காமராஜர் பிறந்த ஊரும் விருதுநகர்தான்.

அப்போது காமராஜர் படித்த விருதுநகர் பள்ளி, படிக்க வரும் மாணவர்களுக்கு இலவச உணவு அளித்தது. பள்ளியின் அந்த நற்செயல்தான், காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது, அவர் மனதில் மதிய உணவுத் திட்டமாக உருவானது. மதராசு மாநிலத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் வைக்கச் சொல்லி, உயிரை விட்ட போராளி சங்கரலிங்கனார் 75 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தது இதே விருதுநகர் தேசபந்து மைதானத்தில்தான்.

விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி பகுதியில் குறிப்பிட்ட சமுதாயத்தினரும், ராஜபாளையத்தில் கணிசமாக உள்ள ஒரு சமுதாயத்தினரும், ஸ்ரீவில்லிபுத்தூரில் வேறொரு சமுதாயத்தினரும் கல்விச் சேவையில் தொடர்ந்து ஈடுபாடு காட்டி வருகின்றனர். இதே ரீதியில், மற்ற சமுதாய மக்களும் ஒவ்வொரு ஊரிலும் கல்விப் பணியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன்மூலம் சாதி, மதப் பாகுபாடின்றி இயங்கும் பள்ளிக்கூடங்களால் இந்த மாவட்டத்தில் சமூக நல்லிணக்கம் பேணிக் காக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் கல்விப் புரட்சிக்கு வித்திட்ட விருதுநகர் கல்வி மாவட்டம், பொதுத் தேர்வில் மாநில அளவில் தொடர்ந்து முதலிடம் பிடித்து வருவது முன்னோர்களின் தியாகத்துக்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT